ஐபிஎல் 2020: ஆர்சிபியை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்

By karthikeyan VFirst Published Oct 15, 2020, 11:39 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 

நடப்பு ஐபிஎல் சீசனில், 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபியை எதிர்கொண்ட நிலையில், இந்த போட்டியில் கிறிஸ் கெய்லுடன் களமிறங்கியது.

ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் ஃபின்ச் முறையே 18 மற்றும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முருகன் அஷ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய 2 ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருந்ததால், டிவில்லியர்ஸ் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் கூக்ளியில் ஆட தடுமாறி, அதிகமுறை அவுட்டாகியிருக்கிறார் என்பதால், அவரை பதுக்கிவைத்துவிட்டு, 4ம் வரிசையில் வாஷிங்டன் சுந்தரும், ஐந்தாம் வரிசையில் ஷிவம் துபேவும் களமிறக்கப்பட்டனர். 

சுந்தர் 14 பந்தில் 13 ரன்களும், துபே 19 பந்தில் 23 ரன்களும் அடித்து, மிடில் ஓவர்களில் ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை ஆர்சிபி அடிக்கமுடியாத வகையில், முமெண்ட்டத்தை கெடுத்து ஆட்டமிழக்க, 17வது ஓவரில் நேரடியாக களத்திற்கு வந்த டிவில்லியர்ஸுக்கு செட்டில் ஆக கொஞ்சம் கூட நேரம் இல்லாததால், முதல் பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ஷமியின் பந்தை அடித்து ஆடமுயன்று, வெறும் 2 ரன்னில் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்ததால், தனது தோள் மீது சுமை இறங்கியதாலும், ஸ்கோர் குறைவாக இருந்ததாலும், அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் அடித்து ஆட முயன்று, ஷமியின் அதே ஓவரில் 48 ரன்களுக்கு கோலியும் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கிறிஸ் மோரிஸ் 3 சிக்ஸர்களை விளாசியதால், ஆர்சிபி அணி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது. 

172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் வழக்கம்போலவே இந்த போட்டியிலும் அதிரடியான மற்றும் அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ராகுலும் மயன்க்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 78 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய மயன்க் 25 பந்தில் 45 ரன்கள் அடித்து சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து  3ம் வரிசையில் களமிறங்கிய கெய்ல், நிதானமாக தொடங்கி பின்னர் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதற்கிடையே கேஎல் ராகுலும் அரைசதம் அடித்தார். ராகுலும் கெய்லும் பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், கடைசி 3 ஓவரில் வெறும் 10 ரன்களே தேவைப்பட்டது. ஆனாலும் வழக்கம்போலவே கடைசி சில ஓவர்களில் சொதப்பி, கடைசி பந்துவரை போட்டியை கொண்டு சென்றனர். கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் கெய்ல் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. 

கடைசி பந்தில் களத்திற்கு வந்த பூரான், சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
 

click me!