ஆர்சிபிக்கு எதிராக படுமட்டமான ஸ்கோரை அடித்த கேகேஆர்.. ஆர்சிபி வெற்றி உறுதி

By karthikeyan VFirst Published Oct 21, 2020, 9:27 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவரில் வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்து 85 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும் ராகுல் திரிபாதியும் களத்திற்கு வந்தனர்.  2வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரின் 3வது பந்தில் திரிபாதியை ஒரு ரன்னிலும், அதற்கடுத்த பந்திலேயே நிதிஷ் ராணாவையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அந்த ஓவரில் ரன்னே வழங்காமல் மெய்டன் ஓவராகவும் வீசினார். 

நவ்தீப் சைனி வீசிய அதற்கடுத்த ஓவரில் ஷுப்மன் கில்லை சைனி ஒரு ரன்னில் வீழ்த்தினார். ஆனால் அந்த ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். இதையடுத்து 4வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரையும் மெய்டனாக வீசியதுடன், டாம் பாண்ட்டனை 10 ரன்களுக்கு அவுட்டாக்கினார். 2 மற்றும் 4 ஆகிய 2 ஓவர்களையும் அடுத்தடுத்து மெய்டனாக வீசினார் முகமது சிராஜ்.

இதன்மூலம் ஐபிஎல்லில் அடுத்தடுத்த 2 ஓவர்களை மெய்டன் ஓவராக வீசிய முதல் பவுலர் என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார். பவர்ப்ளேயில் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்த கேகேஆர் அணி, தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டையும் 4 ரன்களுக்கு இழந்தது. 

அதன்பின்னர் பாட் கம்மின்ஸ் 4 ரன்களுக்கு சாஹலின் சுழலில் அவுட்டாக, கேப்டன் இயன் மோர்கன் அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஃபெர்குசன் 19 ரன்களும் குல்தீப் யாதவ் 12 ரன்களும் அடிக்க, 20 ஓவர் முழுவதும் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 84 ரன்கள் மட்டுமே அடித்தது. 85 ரன்கள் என்ற ஒன்றுமே இல்லாத எளிய இலக்கை ஆர்சிபி விரட்டிவருகிறது.

ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளையும் சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 

click me!