SRH vs KKR: சூப்பர் ஓவரில் கேகேஆர் அபார வெற்றி.. தனி ஒருவனாக கேகேஆரை வெற்றி பெறவைத்த ஃபெர்குசன்

By karthikeyan VFirst Published Oct 18, 2020, 7:56 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி கேகேஆர் அணி வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் நான்காமிடத்திலேயே நீடிக்கிறது.
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் திரிபாதி தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பிக்க, தொடக்கத்தில் நிதானமாக ஆரம்பித்த கில், பவர்ப்ளேயின் ஐந்தாவது ஓவரில் அடித்து ஆட ஆரம்பித்தார். திரிபாதி பதினாறு பந்தில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷுப்மன் கில்லும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் நிதிஷ் ராணா 29 ரன்களிலும் ரசல் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், அதன்பின்னர் கடைசி ஐந்து ஓவரில் மோர்கனும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து ஐந்து பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி 30 பந்தில் 58 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது.

164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய பேர்ஸ்டோவும் கேன் வில்லியம்சனும் இணைந்து அருமையாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து ஆறு ஓவரில் 57 ரன்களை குவித்தனர். வில்லியம்சன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த பிரியம் கர்க் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களத்தில் செட்டில் ஆகியிருந்த பேர்ஸ்டோ 36 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் மனீஷ் பாண்டே ஆறு ரன்களிலும் விஜய் சங்கர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த அப்துல் சமாத், டேவிட் வார்னருடன் இணைந்து அருமையாக ஆடி பதினைந்து பந்தில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை ரசல் வீசினார். முதல் பந்தை நோ பாலாக வீசி, ரீ பால் வீசினார். அதில், ரஷீத் கான் ஒரு ரன் மட்டுமே அடிக்க, முதல் பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. அடுத்த 3 பந்திலும் பவுண்டரி அடித்தார் வார்னர். கடைசி 2 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் அடித்த வார்னர், கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே லெக் பையின் மூலம் கிடைத்தது. எனவே போட்டி டை ஆனது. ஃபெர்குசன் அருமையாக வீசி 4 ஓவர்களில் பதினைந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தார்.

இதையடுத்து சூப்பர் ஓவரில் டேவிட் வார்னரும் பேர்ஸ்டோவும் களமிறங்க, கேகேஆர் அணியில் ஃபெர்குசன் சூப்பர் ஓவரை வீசினார். முதல் பந்தில் வார்னரை கிளீன் போல்டாக்கிய, ஃபெர்குசன் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் மட்டுமே சமாத்துக்கு கொடுத்து, 3வது பந்தில் சமாத்தையும் கிளீன் போல்டாக்கினார். இதையடுத்து சூப்பர் ஓவரில் கேகேஆர் அணிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால், அதை தினேஷ் கார்த்திக்கும் மோர்கனும் எளிதாக அடித்து கேகேஆர் அணியை வெற்றி பெற செய்தனர். இதையடுத்து புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் நான்காமிடத்திலேயே நீடிக்கிறது கேகேஆர் அணி.
 

click me!