ஆரம்பத்தில் ’அம்பி’யாக பம்மி, அப்புறம் ‘அந்நியன்’ஆக உருவெடுத்த பஞ்சாப்.. அரண்டுபோய் கிடக்கும் டாப் அணிகள்

By karthikeyan VFirst Published Oct 21, 2020, 1:38 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் வழிகாட்டுதலில், கேஎல் ராகுலின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடிவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவியது.

முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸிடம் சூப்பர் ஓவரில் தோற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப், அடுத்த போட்டியில் ஆர்சிபியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.

இந்த சீசனின் முதல் 7 போட்டிகளில் கெய்ல் அணியில் சேர்க்கப்படவில்லை. மேக்ஸ்வெல்லும் சொதப்பினார். எனவே பேட்டிங்கில் ராகுல் மற்றும் மயன்க் அகர்வாலையே அதிகமாக சார்ந்திருந்ததால் தோல்விகளை தழுவியது. அதிலும் போட்டி முழுக்க நன்றாக ஆடி, கடைசி ஒருசில ஓவர்களில் சொதப்பியதால் மட்டுமே தோல்வியை தழுவிவந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

ஆனால், முதல் பாதியில் பெற்ற படிப்பினைகளால், 2வது பாதியில் அருமையாக ஆடிய பஞ்சாப் அணி, ஒரு அணியாக இணைந்து கடுமையாக போராடி வெற்றிகளை பெற்றுவருகிறது. சீசனின் முதல் பாதியில் வீழ்த்திய ஆர்சிபி அணியை மீண்டும் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கிய பஞ்சாப் அணி, அதன்பின்னர் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸிடம் கடைசி வரை கடுமையாக போராடி, 2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை, ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்தே 20 ரன்கள் மட்டுமே அடித்த போதிலும், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.

பஞ்சாப் அணி வெற்றி பெற்றதைவிட, ராகுலும் மயன்க் அகர்வாலும் சோபிக்காத நிலையிலும் பெற்ற வெற்றி என்பதுதான் அந்த அணிக்கு கூடுதல் மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையளிக்கும் விஷயம். ராகுலையும் மயன்க் அகர்வாலையும் மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்த இந்த வெற்றி பஞ்சாப் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

டெல்லி கேபிடள்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி ஆகிய புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களில் இருக்கும் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி 8 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் பஞ்சாப் அணி, அதை செய்தால், பிளே ஆஃபிற்கு சென்றுவிடும்.

போராடி தோற்றுக்கொண்டிருந்த பஞ்சாப் அணி, தங்களது போராட்டம் வீணாகிவிடாத வகையில், கடந்த 3 போட்டிகளில் போராடி வெற்றிகளை பெற்றுள்ளது. சீசனின் ஆரம்பத்தில் அம்பியாக பம்மிய பஞ்சாப் அணி, 2ம் பாதியில் அந்நியனாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

புள்ளி பட்டியலில் டாப்பில் இருக்கும் அணிகளையே அடித்து துவம்சம் செய்திருப்பதுடன், கெய்ல் வந்தபிறகு வலுவடைந்துள்ள பஞ்சாப் அணிக்கு, பூரான் ஏற்கனவே நம்பிக்கையளித்துவரும் நிலையில், டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக மேக்ஸ்வெல்லும் பெரிய ஷாட்டுகளை ஆடி ஃபார்முக்கு திரும்பியிருப்பதால், கெய்ல், மயன்க், ராகுல், பூரான், மேக்ஸ்வெல் என மிரட்டலான பேட்டிங் ஆர்டருடன் எதிரணிகளை அச்சுறுத்துகிறது பஞ்சாப் அணி. இவர்கள் ஐவரில் இருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் கூட எதிரணிகளின் கதி அவ்வளவுதான். அதனால் பஞ்சாப் அணியை, சீசனின்  முதல் பாதியில் வீழ்த்திய அணிகள் எல்லாம் அரண்டுபோய் கிடக்கின்றன.
 

click me!