கொஞ்சம் பொறுப்பா ஆடுங்க.. இப்படிலாம் ஆடுனா வேலைக்கு ஆகாது!! டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் டாப்பை கழட்டிய கேப்டன் தோனி

By karthikeyan VFirst Published Apr 22, 2019, 3:42 PM IST
Highlights

சிஎஸ்கே அணி பவர்பிளேயில் சொற்ப ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துதான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாயிற்று. தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்த போட்டியில் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் வெற்றியை நெருங்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். 

ஐபிஎல் 12வது சீசனில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் பார்த்திவ் படேலின் அபாரமான ரன் அவுட்டால் கடைசி பந்தில் ஆர்சிபி அணி திரில் வெற்றி பெற்றது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, பவர்பிளேயிலேயே வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, கேதர் ஆகிய 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 

அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறிது நேரம் ஆடினர். எனினும் மந்தமாக ஆடிய ராயுடு, 20 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தோனி அவ்வப்போது சிக்சரும் பவுண்டரியும் அடித்து தோல்வியை நெருங்கிவிடாமல் பார்த்துக்கொண்டார். 

ஜடேஜா 17வது ஓவரிலும் பிராவோ 19வது ஓவரிலும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த தோனி, அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்னும் ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்க, கடைசி பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த பந்தை தோனி அடிக்காமல் விட, எனினும் ஒரு ரன் ஓடினர். ஆனால் ஆர்சிபி விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அந்த பந்தை பிடித்து பேட்டிங் முனையை நோக்கி ஓடிவந்த ஷர்துல் தாகூரை ரன் அவுட் செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவர்பிளேயில் சொற்ப ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துதான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாயிற்று. தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்த போட்டியில் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் வெற்றியை நெருங்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். அதுதான் நேற்றும் நடந்தது. 4 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்துவிட்டதால், அடுத்து களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், இதற்கு மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அத்துடன் ரன்னும் சேர்க்க வேண்டும். அது கடினமானது. 

ரன்ரேட்டும் குறைவு, விக்கெட்டுகளும் சரிந்த நிலையில், பின்வரிசை வீரர்கள் கண்டிப்பாக பெரிய ஷாட்டுகளை ஆட வேண்டிய கட்டாயத்தில் இருப்பர். அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது. பெரிய ஷாட்டுகளை தொடர்ந்து ஆடும்போது விக்கெட்டை பறிகொடுக்க நேரிடும். விக்கெட்டையும் இழந்துவிடாமல் மிகவும் கவனமாக பெரிய ஷாட்டுகளை தொடர்ந்து அடிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுதான் நேற்றைய போட்டியில் நடந்தது. 

போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த காரணத்தை குறிப்பிட்டார். இதுகுறித்து பேசிய தோனி, எதிரணியின் திட்டங்களை தெரிந்துகொண்டு ஆட வேண்டும். தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை இழந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சுமையும் நெருக்கடியும் அதிகரிக்கும். 

மிகப்பெரிய ஷாட்டுகளை அடிப்பது எளிது; அப்படி அடித்து அவுட்டாவதும் எளிது. சில பெரிய ஷாட்டுகளை அடிப்பதுடன் நமது வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. திட்டமிட்டு சரியாக ஷாட்டுகளை ஆட வேண்டும். அதேபோல பெரிய ஷாட்டுகளை ஆடி ரன்களை குவிக்க வேண்டிய நேரத்தில் மந்தமாக ஆடுவதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே சூழலை கணித்து அதற்கேற்றாற்போல ஆட வேண்டும். அப்போதுதான் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபினிஷர்களாக முடியும். கடைசி நேரத்தில் அதிகமான ரன் தேவைப்பட்டதால்தான் சிங்கிள் ஓடாமல் ஸ்டிரைக்கை நானே எடுத்துக்கொண்டேன் என்று தோனி தெரிவித்தார். 
 

click me!