ஐபிஎல் 2020: கொஞ்சம் கூட லாஜிக்கே இல்ல.. சுத்த அபத்தமா இருக்கு.. தீயாய் பரவிய தகவலுக்கு சிஎஸ்கே மறுப்பு

By karthikeyan VFirst Published Sep 11, 2020, 3:47 PM IST
Highlights

சிஎஸ்கேவில் ரெய்னாவுக்கு மாற்று வீரர் குறித்து பரவிய தகவலுக்கு அந்த அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், சிஎஸ்கே அணியில் ரெய்னாவுக்கு மாற்று வீரர் யார் என்பதே ஹாட் டாபிக்காக உள்ளது.

சிஎஸ்கே அணிக்காக 2008லிருந்து இதுவரை சிஎஸ்கே அணி ஆடிய அனைத்து சீசன்களிலும் அந்த அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நட்சத்திர வீரர் ரெய்னா. சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையாகவே திகழ்ந்த அவர், இந்த சீசனிலிருந்து திடீரென விலகி, துபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்துவிட்டார். அவர் மீண்டும் சிஎஸ்கேவிற்கு ஆட விருப்பம் தெரிவித்திருந்தாலும், கொரோனா அச்சுறுத்தலால் நினைத்தால் போவதும் வருவதுமாக இருக்க முடியாது. எனவே ரெய்னா இந்த சீசனில் ஆடுவது சந்தேகம்தான்.

எனவே ரெய்னாவுக்கு மாற்றாக, அவர் இறங்கிவந்த 3ம் வரிசையில் யார் இறங்குவார், ரெய்னாவுக்கு மாற்று வீரர் யார் என்பதே பெரும் விவாதமாக உள்ளது. சிஎஸ்கேவில் ரெய்னாவின் இடத்தை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஐபிஎல்லில் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரியவரான ரெய்னா, ஐபிஎல்லில் 137.14 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 5368 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார். 

சிஎஸ்கேவில் ரெய்னாவுக்கு மாற்று யார் என்பது பெரும் விவாதமாக உள்ள நிலையில், அணியில் ஏற்கனவே இருக்கும் வீரர்களே போதுமானது; அவர்களை வைத்தே பார்த்துக்கொள்ளலாம் என்று கேப்டன் தோனி தெரிவித்ததாக அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதேபோலவே ரெய்னாவுக்கோ அல்லது இந்த சீசனிலிருந்து விலகிய ஹர்பஜன் சிங்கிற்கோ மாற்று வீரர் என்று யாரையும் சிஎஸ்கே அறிவிக்கவில்லை.

ரெய்னா இறங்கிய 3ம் வரிசையில் யாரை இறக்கலாம் என்பது மட்டுமே சிஎஸ்கேவின் யோசனையாக இருக்குமே தவிர, மாற்று வீரரை ஒப்பந்தம் செய்வது அந்த அணியின் திட்டமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அந்த அணி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இடது கை அதிரடி வீரரான ரெய்னாவுக்கு மாற்றாக, இங்கிலாந்தின் இடது கை அதிரடி வீரரான 33 வயதான டேவிட் மாலனை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியது. இந்த தகவல் வைரலாகவே, இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள காசி விஸ்வநாதன், சிஎஸ்கேவில் ஒரு அணிக்கு அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கைக்கான கோட்டா ஏற்கனவே முழுமையடைந்துவிட்டது. எனவே இன்னொரு வெளிநாட்டு வீரரை எப்படி அணியில் எடுக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை என்று, டேவிட் மாலனை எடுப்பது குறித்த பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அணிகள், அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே எடுக்க முடியும். எனவே அந்தவகையில், சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், ட்வைன் பிராவோ, இம்ரான் தாஹிர், மிட்செல் சாண்ட்னெர், லுங்கி இங்கிடி, ஜோஷ் ஹேசில்வுட், சாம் கரன் ஆகிய 8 வெளிநாட்டு வீரர்கல் உள்ளனர். எனவே புதிதாக இன்னொரு வெளிநாட்டு வீரரை ஒப்பந்தம் செய்ய முடியாது என்பதே நிதர்சனம். அந்த லாஜிக்கை சுட்டிக்காட்டித்தான் காசி விஸ்வநாதன் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிஎஸ்கே அணி வீரர்கள்:

தோனி(கேப்டன்), ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், லுங்கி இங்கிடி, கரன் ஷர்மா, முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், நாராயணன் ஜெகதீஷன், மிட்செல் சாண்ட்னெர், மோனுகுமார், கேஎம் ஆசிஃப், ஜோஷ் ஹேசில்வுட், சாம் கரன், சாய் கிஷோர்.
 

click me!