தோனி அந்த விஷயத்தில் ரொம்ப உறுதியாக இருந்தார்.. அவர் சொன்னார்; செஞ்சுட்டோம்..! சிஎஸ்கே சி.இ.ஓ அதிரடி

By karthikeyan VFirst Published Aug 27, 2020, 2:30 PM IST
Highlights

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக சென்னையில் வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவதில் கேப்டன் தோனி உறுதியாக இருந்ததாக சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒருவழியாக ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. எனவே அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வீரர்கள் உள்ளிட்ட அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளும் முன்கூட்டியே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டன.

ஐபிஎல் இந்த ஆண்டு கண்டிப்பாக நடப்பது உறுதியானதுமே அனைத்து வீரர்களும் அதற்காக தயாராக தொடங்கினர். ஆனால் சிஎஸ்கே அணி மட்டும்தான், ஐக்கிய அரபு அமீரகம் கிளம்புவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியில் ஆடும் உள்நாட்டு வீரர்களை ஒருவாரத்திற்கு முன்பாகவே சென்னைக்கு வரவழைத்து 5 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது. வீரர்கள் 4-5 மாதங்களாக கிரிக்கெட் ஆடாததால், இந்த பயிற்சி முகாம் கண்டிப்பாக தேவை என கருதி சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 

தோனி, ரெய்னா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், ராயுடு, கேதர் ஜாதவ் ஆகிய வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு ஃபிட்னெஸ் பயிற்சி மற்றும் பேட்டிங், பவுலிங் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அந்த பயிற்சி முகாமில் தோனி செம ஃபார்மில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டார். இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும் விதமாக அமைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாகவே, வீரர்கள் ஒருங்கிணைவது, ஆலோசிப்பது, பயிற்சி என அந்த 5 நாட்கள் பயிற்சி முகாம் மிகவும் உதவிகரமானதாக இருந்தது. ஆகஸ்ட் 15லிருந்து 19 வரை இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், தோனியின் ஆலோசனையின் பேரில்தான் அந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாக சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய காசி விஸ்வநாதன், ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பது உறுதியானதுமே, துபாய்க்கு கிளம்புவதற்கு முன் 5 பயிற்சி முகாம் நடத்துவது ரிசர்வேசன் இருந்தது. இந்த பயிற்சி முகாம் பயனளிக்குமா என்று தோனியிடம் கேட்டேன். அவர் பயிற்சி முகாம் நடத்துவதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

தோனி என்னிடம், சார், சுமார் 4-5 மாதங்களாக யாரும் எந்தவிதமான போட்டியிலும் ஆடவில்லை. அதனால் அனைவரும் சென்னையில் ஒன்றிணைந்து பயிற்சி செய்வது அவசியம். துபாய்க்கு கிளம்பும் முன் இப்படியொரு பயிற்சி முகாம் நடத்துவது நல்லது. வீரர்களுக்கு அது பயனளிக்கும் என்று என்னிடம் சொன்னார் தோனி. அந்தவகையில், அவர் சொன்ன மாதிரி இந்த பயிற்சி முகாம் பயனளிக்கும் விதமாக அமைந்தது என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 

click me!