பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றி!! ஆட்டநாயகன் தோனி

By karthikeyan VFirst Published Apr 1, 2019, 10:13 AM IST
Highlights

ஐபிஎல்லில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. 
 

ஐபிஎல்லில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. 

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

சென்னை அணி, ராயுடு, வாட்சன், கேதர் ஜாதவ் ஆகிய மூன்று விக்கெட்டுகளை 27 ரன்களுக்கே இழந்துவிட்டது. நான்காவது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். அனுபவ வீரர்களான இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடினர். விரைவில் ரன் குவிக்க வேண்டும் என்று அவசரப்படவில்லை. கடைசி வரை களத்தில் நிற்பதுதான் முக்கியம் என்பதை உணர்ந்து தோனி நிதானமாக ஆடினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரெய்னா, 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து நிதானமாக ஆடிய தோனி, டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கிவிட்டார். 17 ஓவரின் முடிவில் சென்னை அணி வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. குல்கர்னி வீசிய 18வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும் பிராவோ ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியும் விளாசினார். அந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததோடு பிராவோவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 

உனாத்கத் வீசிய கடைசி ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸரையும் தோனி 3 சிக்ஸர்களையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து 20 ஓவர் முடிவில் 175 ரன்கள் என்ற நல்ல ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது சென்னை அணி.

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கியமான விக்கெட்டுகளான ரஹானே, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளும் அந்த அணி 14 ரன்கள் எடுத்தபோதே வீழ்ந்துவிட்டன. அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித்தும் திரிபாதியும் இணைந்து சிறப்பாக ஆடினர். சாண்ட்னெர், ஜடேஜாவின் பவுலிங்கை அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை இம்ரான் தாஹிர் பிரித்தார். திரிபாதியை 39 ரன்களில் வீழ்த்தினார். 

ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்களில் ஆட்டமிழக்க, கிருஷ்ணப்பா கௌதம் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் அடித்து ஆடி இலக்கை நோக்கி சென்றார். அவருடன் சேர்ந்து ஜோஃப்ரா ஆர்ச்சரும் அபாரமாக அடித்து ஆடினார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆட்டம் சென்னை அணியின் பக்கம் திரும்பியது. அந்த ஓவரில் பிராவோ 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து இறுதிவரை பொறுமை காத்து சிறப்பாக ஃபினிஷ் செய்து சென்னை அணியின் ஸ்கோரை எதிர்பார்த்திராத அளவிற்கு உயர்த்திய தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 
 

click me!