சிஎஸ்கேவால் எழுந்த சிக்கல்.. நடக்குமா ஐபிஎல்..? குறைந்தது கங்குலியின் கான்ஃபிடன்ஸ்

By karthikeyan VFirst Published Aug 30, 2020, 10:16 PM IST
Highlights

சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட அணியின் உதவியாளர்கள், நிர்வாகிகள் சிலருக்கு என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிஎஸ்கே அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக, சென்னையில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது. சிஎஸ்கே அணியை தவிர வேறு எந்த அணியும் இந்தியாவில் பயிற்சி முகாம் நடத்தவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அந்த அணியை சேர்ந்த மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அதனால் சிஎஸ்கே அணி பயிற்சியை தொடங்குவது தாமதமாகியிருப்பதுடன், கொரோனா அச்சுறுத்தலும் அதிகமாகியுள்ளது. இது சிஎஸ்கேவிற்கு மட்டுமல்லாது மற்ற அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற சிஎஸ்கே அணிக்கு எச்சரிக்கை விடுக்குமாறு பிசிசிஐக்கு மற்ற அணிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது, மற்ற அணிகளுக்கு பீதியை கிளப்பியிருப்பதுடன், ஐம்பது நாட்கள் நடக்கும் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்தி முடிப்பதே பிசிசிஐக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, சிஎஸ்கே அணியின் நிலை குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஐபிஎல் எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என நம்புகிறேன். ஐபிஎல் நீண்ட நாட்கள் நடக்கும் தொடர். எனவே முழு தொடரும் நல்ல முறையில் நடக்கும் என நம்புகிறேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்று கங்குலியால் நம்பிக்கையாக உறுதியாக கூறமுடியவில்லை. ஏனெனில் அது அவரது கையில் இல்லை. சிஎஸ்கே அணியைப்போல மேலும் சில அணிகளில் மேலும் பலருக்கு கொரோனா உறுதியானால் ஐபிஎல் நடப்பதே சந்தேகமாகிவிடும். 

click me!