
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எவ்வாறாயினும், முன்மொழியப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தால் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு 2029ஆம் ஆண்டு வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
சட்ட மசோதா சட்டமான பிறகும், தொகுதிகளின் மறுவரையறைக்குப் பிறகுதான் ஒதுக்கீடு செயல்படுத்தப்படும். அதுவும் 2027ஆம் ஆண்டில் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் எனவும் தெரியவருகிறது.
2002ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசியலமைப்பின் 82வது பிரிவு, 2026 க்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது. அதற்கு முன்பு 2026 க்குப் பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2031 இல் மேற்கொள்ளப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரை செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இனி பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை இப்படி அழைப்போம்! புதிய பெயர் சூட்டிய பிரதமர் மோடி!
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் கோவிட் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. எனவே அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 இல் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது. விரைவில் தொகுதிகளை மறுவரையறை செய்ய, சட்டபிரிவு 82 இல் திருத்தம் கொண்டுவரலாம். ஆனால், உடனடியாக தொகுதிகள் மறுவரையறை செய்யும் நடவடிக்கைக்கு தென் மாநிலங்கள் எதிராக உள்ளன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகிவிட்ட பின்பும் 15 ஆண்டுகளுக்குதான் இட ஒதுக்கீடு அமலில் இருக்கும். அதற்குப் பின் தேவைப்பட்டால் அதனை நீட்டிக்க முடியும். முக்கியமான அம்சமாக ஒவ்வொரு முறை தொகுதி மறுவரையறை செய்யப்படும்போதும் பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்படும்.
மக்களவை மற்றும் சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு நேரடித் தேர்தல் மூலம் நிரப்பப்படும் என்று ஆறு பக்க மசோதா கூறுகிறது. மேலும், மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவைகளுக்கு இந்த ஒதுக்கீடு பொருந்தாது. மேலும் உள் ஒதுக்கீடாக, மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கானதாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயது நிர்ணயம் செய்யுங்கள்: உயர் நீதிமன்றம் பரிந்துரை
இந்த மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இடஒதுக்கீடு சேர்க்கப்படவில்லை. சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போன்ற கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை பல ஆண்டுகளாக எதிர்ப்பதற்குக் காரணமும் இதுதான்.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது 2010-ல் உருவாக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் போன்றதுதான் இந்த மசோதா. ஆங்கிலோ-இந்தியன் சமூகத்திற்கான ஒதுக்கீட்டைக் கொண்டுவருவதற்கான இரண்டு திருத்தங்கள் மட்டுமே புதிய மசோதாவில் கைவிடப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் 14 சதவீதம் மட்டுமே உள்ளனர், இது உலக சராசரியை விட மிகக் குறைவு.