
ரூ.15 கோடி சொத்துக்காக கணவனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், கல்யான் டவுன்ஷிப்பைச் சேர்ந்தவர் சங்கர் கெய்க்வாட் (44). இவரது மனைவி ஆஷா கெய்க்வாட் (40). தனது கணவரை கடந்த மே மாதம் 18 ஆம் தேதியில் இருந்து காணவில்லை என்று அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆஷா கெய்க்வாட் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்து சங்கர் கெய்க்வாட்-யை போலீசார் தேடி வந்தனர். சங்கர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி ஆஷாவுக்கு தொடர்பிருக்கலாம் என்று சங்கரின் உறவினர்கள் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார், ஆஷா கெய்க்வாட்-ன் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆஷா, தொடர்ந்து சிலருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்தபோது, சங்கர் கெய்க்வாட்-யை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து போலீசார் ஒருவர் கூறும்போது, சங்கர் கெய்க்வாட், தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துக்களை மனைவி ஆஷாவின் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். இந்த நிலையில் சங்கரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த சொந்து, தனது தந்தையின் மூலம் கிடைத்தது என்பதால், அதனை ஆஷாவுக்கு எழுதித்தர சங்கர் மறுத்துள்ளார். இதனால், கணவர் சங்கரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார் ஆஷா.
மே 18 ஆம் தேதி அன்று சங்கரை, ஆட்டோ ரிக்ஷா மூலம் பாதல்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஆஷா. அங்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். சங்கர் மயங்கியவுடன், ஆஷா ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு வந்த 4 பேர், சங்கரை இரும்பு கம்பிகளால் தாக்கி கொன்றுள்ளனர். மேலும், சங்கரின் உடலை, ஒதுக்குப்புறமான பகுதியில் வீசிச் சென்றுள்னர்.
இதன் பிறகு, எதுவும் நடவாததுபோல், ஆஷா தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். பின்னர், கணவர் சங்கர் காணாமல் போனதாக நாடகமாடி போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆஷா கெய்க்வாட், போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த 4 பேரையும் தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் கூறினார்.