'காலா'வுக்கு மட்டுமில்லீங்க... ரஜினியின் அனைத்து படத்தையும் திரையிட மாட்டோம்... பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்

First Published Jun 3, 2018, 2:25 PM IST
Highlights
Resistance to Karla film in Karnataka


காலா படத்துக்கு மட்டுமல்ல, ரஜினியின் அனைத்து படங்களையும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்சன வேதிகே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசி வருவதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா உள்ளிட்டோர் கடிதம் அளித்தனர்.

இந்த நிலையில், கன்னட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரைப்பட உரிமையாளர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போது காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், கர்நாடகாவில் திரையிடை தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக ரஜினி ரசிகர்கள், முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதி கோரியிருந்தனர். இந்த விவகாரத்தில் மக்களின் உணர்வே முக்கியம் என்றும், அவர்கள் எடுக்கும் முடிவை அரசு ஏற்கும் என்றார். கன்னட அமைப்புகளும், திரைப்பட வர்த்தக சபையும், மக்களும் கூறிவிட்டால் அரசு தலையிடாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் ஷெட்டி பிரிவு, காலா திரைப்படத்தை எதிர்த்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய அந்த அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி, நடிகர் ரஜினிகாந்த், கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். கன்னட மக்களையும், அரசையும் விமர்சித்த ரஜினியின் திரைப்படத்தை இனி கர்நாடகாவில் திரையிட மாட்டோம். 

காலா திரைப்படம் மட்டுமல்லாது, அடுத்து வருகிற ரஜினியின் அனைத்து படங்களையும் திரையிட விடமாட்டோம். ரஜினி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டாலும், எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம். எங்கள் எதிர்ப்பையும் மீறி காலா திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கு மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஆவேசமாக கூறினார்.

click me!