
போலி செய்திகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள், கர்நாடக அரசு செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் தனி காவல்துறை பிரிவை உருவாக்க முடிவு செய்துள்ளது பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, போலிச் செய்திகளைக் களையவும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதை குறிப்பிடுகிறார்.
"2013ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, போலிச் செய்திகள் அதிகரித்தன. மீண்டும், மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் எதிரிகளும், அதே தந்திரத்தை கையாண்டு வருகின்றனர். சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் போலிச் செய்திகள் அதிகமாக உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, தவறான தகவல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்" என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
ஐ.நா. சபையில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதைத் தடுத்த சீனா!
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்திய அரசு ஐடி விதிகளின் ஒரு பகுதியாக 'தகவல் சரிபார்ப்பை' கொண்டு வரும்போது, கபிஸ் சிபல் போன்றவர்களும், எடிட்டர்ஸ் கில்டு போன்ற அமைப்புகளும் அரசாங்கத்தைப் பற்றிய தவறான தகவல்களை பரப்பினர் என்று கூறியுள்ளார்.
"2004 முதல் 2014 வரை இருந்த காங்கிரஸ் அரசுகள் சட்டப் பிரிவு 66A ஐ தவறாகப் பயன்படுத்தின. இப்போது காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தகவல் சரிபார்ப்புக்காக தனி போலீஸ் பிரிவைக் கொண்டுவருகிறார். ஆனால், இப்போது அவர்கள் அமைதி காக்கிறார்கள். இது காங்கிரசின் பாசாங்குத்தனம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மைச் சரிபார்ப்பு மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்துவதில் மோடி அரசுக்கும் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
"காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பேச்சுச் சுதந்திரம் மீறப்பட்டதாக பொய்யான அறிக்கைகளை வெளியிடுவார்கள், அரசாங்கம் பற்றிய பொய்யான தகவல்களைப் பரப்புவார்கள். ஜனநாயகமும் கருத்து சுதந்திரமும் ஆபத்தில் உள்ளது என்பார்கள். ஆனால் அவர்கள் மட்டும் மக்களை மிரட்டி சிறையில் தள்ளுவதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவார்கள்" என்று விமர்சித்துள்ளார். "அடுத்த முறை காங்கிரஸ் கட்சியினர் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவதைக் கேட்கும்போது, அவர்கள் பொய்யர்கள், நயவஞ்சகர்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்" எனவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாடியுள்ளார்.
தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான் நினைவுக்கும் வரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு