ஜி20 மாநாட்டின் முதல் அமர்வில் கலந்து கொள்ள டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வந்த உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வரவேற்றார்
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்த மாநாட்டின் முதல் அமர்வு இன்று தொடங்கிய நிலையில், டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வந்த உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வரவேற்றார். ஜி20 தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி, பின்னணியில் ஒடிசாவின் கோனார்க் சக்கரத்தின் பிரதியுடன் புகைப்படம் எடுப்பதற்காக அவர்களுடன் கைகுலுக்கினார். அந்த வகையில் ஜி20 அரங்கின் வருகைப் பகுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் கைகுலுக்கிய பிரதமர், ஒடிசாவில் உள்ள சூரிய கோவிலின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கோனார்க் சக்கரத்தின் முக்கியத்துவத்தையும், சக்கரத்தின் பின்னால் உள்ள சுவாரசியமான வரலாறு பற்றியும் விளக்கினார். எனவே உலக பிரசித்தி பெற்ற கோனார்க் சக்கரம் பற்றி விரிவாக பார்க்கலாம்..
கோனார்க் சக்கரம்
கோனார்க் சக்கரம் 13 ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் நரசிம்மதேவாவின் ஆட்சியின் கீழ் கட்டப்பட்டது. சக்கரங்கள் கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலின் ஒரு பகுதியாகும், இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச்சின்னம். மேலும் ஒடிசாவின் பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. நரசிம்மதேவரின் கோவில் ஒரு பெரிய தேர் வடிவத்தில் கட்டப்பட்டது, அதில் பன்னிரண்டு ஜோடி சக்கரங்கள் அழகாக செதுக்கப்பட்டு, அதில் 7 குதிரைகள் வரையப்பட்டிருக்கும்.
24 ஆரங்களை கொண்ட சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பண்டைய ஞானம் மற்றும் மேம்பட்ட நாகரிகத்தை உள்ளடக்கியது. கோனார்க் சக்கரத்தின் சுழலும் இயக்கம் நேரத்தையும் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியான மாற்றத்தையும் குறிக்கிறது.
G20 உச்சிமாநாட்டின் சிறப்பு மெனு.. இந்தியாவின் சமையல் பாரம்பரியத்தை பிதிபலிக்கும் தினை உணவுகள்..
கோனார்க் சக்கரங்களின் முக்கியத்துவம்
சூரிய பகவானுக்காக எழுப்பப்பட்ட இந்த கோயிலில் உள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன. 9 அடி விட்டம் கொண்ட கோனார்க் சக்கரம் 8 அகன்ற ஆரங்களை 8 உள் ஆரங்களையும் கொண்டுள்ளது. சூரிய பகவானின் சூரிய தேரின் சக்கரங்களைக் குறிக்கும் வகையில் 24 சக்கரங்கள் இக்கோயிலில் உள்ளன.
24 சக்கரங்களில், 6 பிரதான கோவிலின் இருபுறமும், 4 சக்கரங்கள் கோயிலின் ஒவ்வொரு பக்கத்திலும், 2 சக்கரங்கள் கிழக்கு முகப்பில் படிகளின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளன. இந்த கோனார்க் சூரிய கோவிலின் 12 சக்கரங்கள் ஆண்டின் 12 மாதங்களைக் குறிக்கின்றன. மேலும் 8 ஆரங்கள் நாளின் 8 நேரப் பிரிவுகளைக் குறிக்கின்றன. கோனார்க் கோயிலின் பெரிய சக்கரங்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
இந்த தேரின் சக்கரங்கள் 'வாழ்க்கைச் சக்கரம்' என்று நம்பப்படுகிறது. இது உருவாக்கம், பாதுகாத்தல் மற்றும் உணர்தல் ஆகியவற்றின் சுழற்சியை சித்தரிக்கிறது. கோனார்க் சூரியக் கடிகாரம் சூரியனின் நிலையைப் பொறுத்து நாளின் துல்லியமான நேரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கோனார்க் சக்கரத்தின் நேர்த்தியான வடிவமைப்பு சூரிய ஒளியை அதன் வழியாக செல்ல அனுமதிக்கிறது.