வருமான வரித்துறை சோதனையின் போது துணை ராணுவம் எதற்கு? முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி

First Published Dec 23, 2016, 7:06 PM IST
Highlights
வருமான வரித்துறை சோதனையின் போது துணை ராணுவம் எதற்கு?

முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி

 

வருமான வரித்துறை சோதனையின் போது பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையை(சி.ஆர்.பி.எப்.) நிறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாநில அரசின் அனுமதியோடு, வேண்டுகோளின் அடிப்படையில்தான் சி.ஆர்.பி.ஆப் படை அனுப்பப்பட வேண்டும் என மேற்குவங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சோதனை

தமிழகத்தில் தலைமைச்செயலாளர் வீடு, அலுவலகம் ஆகியவற்றின் வருமான வரித்துறை சோதனையின் போது துணை ராணுவப்படை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டது. இதற்கு முதன்முதலில் மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-

கூட்டாச்சிக்கு எதிரானது

வருமான வரித்துறையின் சோதனையின் போது துணை ராணுவப் படையை பாதுகாப்புக்காக நிறுத்தும் மத்திய அரசின் ெசயல் என்பது சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. ஒட்டுமொத்தமாக கூட்டு ஆட்சி தத்துவத்துக்கு எதிரானது.

வாபஸ்

மாநிலங்களில் துணை ராணுவப்படை குவிக்கப்படுவது என்பது, மாநில அரசுகளின் வேண்டுகோளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இது போல் வருமான வரிச்சோதனை பாதுகாப்புக்காக துணை ராணுவப்படை குவிக்கப்படும் உத்தரவை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பாதுகாப்புக்காக மாநில அரசுகளின் போலீஸ் தேவை என்று கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் மாநில அரசு மூலம் வழங்கப்படும்.

முன்அறிவிப்பு

மாநிலத்தில் துணை ராணுவப் படை குவிக்கப்படுவது குறித்து மாநில அரசுகளுக்கு எந்தவிதமான தகவலும் கொடுக்கப்படுவதில்லை. இனி அது போன்ற முன் அறிவிப்பு குறிப்புகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது பிரிவில் மாநில அரசு,மத்தியஅரசின் சட்ட, நீதி வரையறைகள், அதிகாரங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. பொது அதிகாரம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு என்பது மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டதே ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் நகல் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மேற்கு வங்காள அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 

click me!