பாஜகவின் டீலுக்கு ஓ.கே சொன்ன கூட்டணி கட்சிகள்.. புதிய சபாநாயகர் யார்? லிஸ்ட்டில் இருக்கும் அந்த 3 பேர்..

By Ramya s  |  First Published Jun 19, 2024, 11:10 AM IST

பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் நபருக்கு ஆதரவு தருவதாக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், சபாநாயகர் பட்டியலில் உள்ள 3 பாஜக தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.


சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 291 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் எந்த கட்சியும் வெற்ற பெறாததால் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி துணையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 2014, 2019-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டிலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராகி உள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 72 பேர் இடம்பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பீகார் முன்னாள் முதலமைச்சர் மஞ்சி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் ஆகியோருக்கும் கேபினட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இந்த சூழலில் அடுத்த சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால் சபாநாயகர் பணிக்கு கடும் போட்டி நிலவுகிறது. பாஜக சபாநாயகர் பதவியை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அதே நேரத்தில், பாஜகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவருமே இந்த பதவி மீது கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு, எம்.பிக்களின் தகுதி நீக்கம் ஆகியவற்றில் சபாநாயகரின் முடிவே இறுதியானது என்பதால் பாஜக இந்த பதவியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுத்தராது என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான் நேற்று டெல்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் மக்களவை சபாநாயகராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் லாலன் சிங், எல்.ஜே.பி சார்பில் சிராஜ் பஸ்வான், தெலுங்கு தேசம் சார்பில் ராம் மோகன் நாயுடு, அப்னா தளம் சார்பில் அனுபிரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மனோகர் லால் கட்டார், தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜுஜு, ஜெய் சங்கர் உள்ளிட்ட்ட்ட்ரோ பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு விட்டுத்தர வேண்டும் என்று பாஜக கூட்டணி கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைத்ததாகவும், பாஜகவின் இந்த கோரிக்கையை கூட்டணி கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சபாநாயகராக யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவதாக ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து இன்று அல்லது நாளை பிரதமருடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை எனில், பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் ஒருமனதாக தெர்வு செய்யப்படுவார். 
துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாஜகவிடம் கேட்க உள்ளதாகவும், ஒருவேளை அந்த பதவியை தரவில்லை என்றால் மக்களவை சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த சூழலில் தான் மக்களவை சபாநாயகருக்கான ரேஸில் பாஜகவில் 3 முக்கிய தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளனர். 

புரந்தேஸ்வரி :

மறைந்த நடிகர் என்.டி.ஆரின் மகள் புரந்தேஸ்வரி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஆந்திர மாநில பாஜக தலைவரான இவர் ராஜமுந்திரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரின் சகோதரி புவனேஸ்வரியை தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பத்ருஹரி மஹ்தாப் :

ஒடிசாவை சேர்ந்த பத்ருஹரி மஹ்தாப், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க பாஜகவுக்கு கிடைத்த 10 எம்.பிக்கள் முக்கியமானவர்கள். 
இதனால் பத்ருஹரி மஹ்தாப்க்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பாஜக மீது புது குண்டை வீசும் மம்தா! திரிணாமுல் பக்கம் தாவும் 3 பாஜக எம்.பி.க்கள்?

ஓம்பிர்லா :

மக்களவை சபாநாயகர் பதவிக்கான லிஸ்டில் மீண்டும் ஓம்பிர்லாவின் பெயரும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட இவர், ராஜஸ்தான் மாநிலம் கட்டா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வது செய்வது பாஜகாவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று மேலிடம் நம்புவதாக கூறப்படுகிறது. 

ஏனெனில் புரந்தேஸ்வரி பாஜகவில் இருந்தாலும் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். மேலும் அவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியி சகோதரி. எனவே புரந்தேஸ்வரியை சபாநாயகராக்க பாஜக தயங்குவதாக கூறப்படுகிறது. அதே போல் பத்ருஹரி மஹ்தாப்பும் பிஜு ஜனதா கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர் என்பதால் அவரை சபாநாயகராக்கவும் பாஜக தயக்கம் காட்டுகிறதாம். இதனால் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட ஓம் பிர்லாவின் பெயரும் தற்போது சபாநாயகர் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 
 

click me!