இமாச்சலப் பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது.
தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக - காங்கிரஸ் இடையே தான் இரு முனை போட்டி நிலவியது. பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் இறுதிக்கட்ட பிரச்சாரம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க..இமாச்சல பிரதேசத்தின் முதல்வர், துணை முதல்வர் யார் யார் ? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இமாச்சல பிரதேசத்தின் துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு ?
இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சுக்விந்தர் சிங் சுகு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார்.
முதலில் இமாச்சல பிரதேசம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடவுன் பகுதியைச் சேர்ந்த சுகு, தனது கல்லூரிப் பருவத்தில், இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் (NSUI) காங்கிரஸின் மாணவர் பிரிவில் சேர்ந்தார்.
சுக்விந்தர் சிங் சுகு 1998 முதல் 2008 வரை மாநில இளைஞர் காங்கிரஸின் தலைவராக பணியாற்றினார். அவர் 2013 இல் இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆனார். போக்குவரத்து ஓட்டுநருக்கு பிறந்த சுக்விந்தர் சிங், ஆரம்பத்தில் பால் விற்பனையாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.. தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்!
இதையும் படிங்க..மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!