நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய அமைப்பினர் ஆதரவு

By SG BalanFirst Published Jun 1, 2023, 9:59 PM IST
Highlights

பாஜக எம்பி மீது பாலியல் புகார் கூறி போராடிவரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்காக குடியரசுத் தலைவரைச் சந்தித்து பேசவும் தயாராக இருப்பதாக விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஹரியானாவின் விவசாயிகள் மல்யுத்த வீரர்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்களின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று விவசாயிகள் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர்கள் கங்கை ஆற்றில் தங்கள் பதக்கங்களை எறிய இருந்தபோது அவர்களை வற்புறுத்திய தடுத்த விவசாயிகள், மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராட்டத்தைத் எந்த வகையில் தொடர்வது என நாளை முடிவு செய்ய இருப்பதாக அவர் கூறுகிறார்.

இன்று முசாபர்நகரில் நடந்த ஒரு மெகா கூட்டத்தில் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகளும் காப் மஹாபஞ்சாயத் அமைப்பினரும் கலந்துகொண்டனர். அப்போது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் பேசிய ராகேஷ் திகாயத், "தேவைப்பட்டால் நாங்கள் இந்திய ஜனாதிபதியிடம் செல்வோம்... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார். "கங்கையில் பதக்கங்களை வீச வேண்டாம், ஏலத்தில் வையுங்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அப்படிச் செய்தால் உலகமே முன்வந்து ஏலத்தை நிறுத்தச் சொல்லும்" எனவும் குறிப்பிட்டார்.

சாதி கொடுமையால் ஐஐடி மாணவர் தற்கொலை: குற்றப் பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மல்யுத்த வீரர்களுக்கு ஏன் ஆதரவளிக்கிறார்கள் என்பது குறித்துப் பேசுகையில், "எல்லோரும் பெரிய குடும்பமாக  இருந்தால் நல்லது. ஆனால், மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீகாரில் லாலு யாதவ் குடும்பத்தை உடைத்தார்கள். முலாயம் சிங் யாதவ் குடும்பத்தை என்ன செய்தார்கள் என்று பாருங்கள். ராஜஸ்தானிலும் அதுதான் நடக்கிறது" என்றார்.

ஞாயிற்றுக்கிழமை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீது டெல்லி காவல்துறை பெரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்த பிறகு, மல்யுத்த வீரர்கள் ஹரித்வாருக்குச் சென்று கங்கையில் தங்கள் பதக்கங்களை எறிய முடிவு செய்தனர். அப்போது பாரதிய கிசான் யூனியன் தலைவரான திரு ராகேஷ் திகாயத் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த காப் சமுதாயத் தலைவர்கள் தலையீட்டிற்குப் பிறகு பதக்கங்களை எறியும் முடிவில் இருந்து பின்வாங்கினர்.

இளம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்படும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஜனவரி முதல் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி அவசரச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்! மு.க. ஸ்டாலின் உறுதி!!

பிரிஜ் பூஷன் சரண் சிங் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துவருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்வேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். "என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்கவும் தயார்" என்று சொல்லும் அவர், "என் மீதான குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். நீதிமன்றம் அளிக்கும் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன்" என்றும் சொல்லிவருகிறார்.

இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் மௌனமாக இருந்த மத்திய அரசு முதல் முறையாக புதன்கிழமை தனது முதல் கருத்துதை வெளியிட்டது. மல்யுத்த வீரர்கள் எந்தவிதமான துரித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என எச்சரித்துள்ளதுடன் காவல்துறை விசாரணையின் முடிவு தெரியும்வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியது.

"டெல்லி காவல்துறையின் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்குமாறு விளையாட்டு வீரர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். டெல்லி காவல்துறை உச்சநீதிமன்றத்தில் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளது. விசாரணை முடியும்வரை, தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம்" என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்

தலைநகர் டெல்லியில் பல நாட்களாக நடந்த போராட்டத்துக்கு பிரதமரும் குடியரசுத் தலைவரும் வெகு அருகில் இருந்தும் பாராமுகம் காட்டிவந்தனர். இதுவரை அவர்கள் இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. விளையாட்டு வீரர்களை மகள்கள் என்று சொல்லும் பிரதமர் மோடி தங்கள் பிரச்சினைக்கு ஒருமுறைகூட செவிசாய்க்கவில்லை என்றும் டெல்லி போலீசார் அடக்குமுறையைக் கையாண்டபோது பிரதமர் தோரணையாக  போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர் பஜ்ரங் புனியா தனது உருக்கமான கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய பாதிரியார் பிஷப் பிராங்கோ முலக்கல் ராஜினாமா

click me!