எதிர்க்கட்சியினர் 2028ஆம் ஆண்டில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசுகையில் தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருந்தது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி எம்பி பேசி இருந்தார். இவரைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சி கூட்டணியினர் பேசி இருந்தனர். நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருந்தார்.
இதையடுத்து இன்று லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது பிரதமர் மோடி அவைக்கு வந்து அமர்ந்து இருந்தார். அவைக்குள் நரேந்திர மோடி வரும்போது பாஜகவினர் மோடி மோடி என்று குரல் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்த அதிர் ரஞ்சன், ''நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் ஆகுங்கள், அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு மக்களின் நலன் தான் முக்கியம். நீங்கள் மன் கி பாத்தில் பேசுவதற்கு பதிலாக மணிப்பூர் சென்று பேசலாம்'' என்று தெரிவித்து இருந்தார். இவரது பேச்சுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து பிரதமர் மோடி பேசுகையில், ''காங்கிரஸ் கட்சி மீதுதான் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எப்போது எல்லாம் எதிர்கட்சிகள் கெட்டதை மற்றவர்கள் மீது ஆசிர்வதிக்கிறார்களோ, அப்போது எல்லாம் அவர்கள் பயன் அடைவார்கள். அந்த தனிப்பட்ட நபர் பயன் அடைவார். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர்தான் நான். 2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எங்கள் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
எதிர்க்கட்சிகளுக்கு கடவுள் வழிகாட்டியுள்ளார். அதனால்தான் அவர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். 2018ஆம் ஆண்டிலும் நான் கூறி இருந்தேன். அதாவது, ஆட்சியின் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது அவர்கள் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்று கூறி இருந்தேன். அதையேதான் இப்போதும் கூறுகிறேன்.
நான் உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் கொடுத்தேன். ஆனால் நீங்கள் தயார் ஆகாமல் வருகிறீர்கள். நான் என்ன செய்வது. எந்த மாதிரியான விவாதம் வைத்துக் கொள்வது. நாங்கள் செஞ்சுரி அடிக்கிறோம். ஆனால், நீங்களோ நோ பால் போடுகிறீர்கள். நீங்கள் ஏன் தயாராக வருவதில்லை. அதிர்ஜி ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு கொல்கத்தாவில் இருந்து அழைப்பு வந்து இருக்கும். காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அவரை அவமானப்படுத்துகிறது. அதிர்ஜிக்காக நாங்கள் பரிதாபப்படுகிறோம்'' என்று மோடி பேசினார்.
"அவர்கள் கவனம் ஏழைகளின் பசியில் இல்லை.. அதிகார பசியில் உள்ளது" - எதிர்கட்சிகளை விளாசிய பிரதமர் மோடி!