பேரழிவை ஏற்படுத்திய வயநாடு நிலச்சரிவு குறித்து 13 ஆண்டுகளுக்கு முன்பே நிபுணர் குழுவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த எச்சரிக்கை மத்திய மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் வயநாட்டிலும் கனமழை பெய்து வந்த நிலையில் ஜூலை 29-ம் தேதி இடைவிடாது 12 மணி நேரத்திற்கு மேல் அதி தீவிர கனமழை கொட்டி தீர்த்தது.
பேரழிவை ஏற்படுத்தி நிலச்சரிவு
undefined
இதனால் நேற்று அதிகாலை 2 மணியளவில் மேம்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சில மணி நேர இடைவெளியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அதே பகுதியில் வேறொரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மலையடிவாரத்தை ஒட்டிய 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. நள்ளிரவு மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் மண்ணுக்குள் புதைந்து பலர் உயிரிழந்தனர். வயநாட்டில் பேரிழிவை ஏற்படுத்திய நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.
தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர், தன்னார்வலர்கள் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது. காயமடைந்தவர் 250-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட 3 கிராமங்களில் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்து வந்த 100-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
13 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை
ஆனால் வயநாடு நிலச்சரிவு குறித்து 13 ஆண்டுகளுக்கு முன்பே நிபுணர் குழுவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் (ESAs) குவாரி மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரித்த இந்த அறிக்கை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு, ஆகஸ்ட் 2011 இல் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் மேப்பாடியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரு கிராமம் முழுவதையும் அழிந்ததற்கு சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தான் காரணம் என்று குற்றம்சாட்டியது.
செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா மற்றும் நூல்புழா கிராமங்கள் உள்ள வைத்திரி தாலுக்காவில் உள்ள மேப்பாடி, கேரளாவில் உள்ள 18 சுற்றுச்சூழல் உணர்வுள்ள இடங்களில் (ESL) குழுவால் அடையாளம் காணப்பட்டது என்பதே மிகவும் முக்கியமான விஷயம்.. ஆனாலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் இதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக இந்த கமிட்டியின் அறிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
கடந்த 7 ஆண்டுகளில் அதிக முறை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது கேரளா: மத்திய அரசு தகவல்
அதன் அறிக்கையில், மாதவ் காட்கில் தலைமையிலான குழு மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புள்ள மண்டலங்கள் என்று வகைப்படுத்தவும் அரசு முன்மொழிந்தது. இப்படி சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமான நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது..
இந்த பகுதிகளில் குவாரி உள்ளிட்ட தொழில்களை அனுமதிக்கக்கூடாது எனவும், அதே நேரம் குவாரிகள் அனுமதிக்கப்படும் பகுதிகளில், குவாரிகள் மனித குடியிருப்புகளிலிருந்து குறைந்தது 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையின் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், பின்னர், அரசாங்கம் வெறும் 50 மீட்டர் தூரம் என்று குறைத்தது.
அறிக்கையை நிராகரித்த மத்திய, மாநில அரசுகள்
இதனிடையே மத்திய அரசு பின்னர் காட்கில் குழு அறிக்கையை நிராகரித்ததுடன், கஸ்தூரிரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை நியமித்தது. காட்கில் குழு மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதையும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க இடங்களாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், கஸ்தூரிரங்கன் குழு, மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 சதவீத பகுதிகள் மட்டுமே உணர்திற்ன வாய்ந்த இடங்கள் என்று அறிக்கை அளித்தது.
உம்மன் சாண்டி தலைமையிலான அப்போதைய கேரள மாநில அரசும் காட்கில் அறிக்கையை எதிர்த்தது. மேலும் உம்மன் சாண்டி தலைமையிலான புதிய குழு அமைக்கப்பட்டது. அப்போது, காட்கில் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று ஆதரித்த சில அரசியல்வாதிகளில் மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸும் ஒருவர்.
பிடி தாமஸ் இதுகுறித்து பேசிய போது "உண்மையில், காட்கில் அறிக்கை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. இருப்பினும், அற்பமான அரசியல் காரணங்களுக்காக மீண்டும் அரசாங்கங்கள் அதை எதிர்த்தன. சுற்றுச்சூழலியல் ரீதியாக பலவீனமான பகுதியை வெறும் அரசு ஆணை மூலம் எப்படி பாதுகாப்பான இடம் குறிப்பிட முடியும்? தற்போதைய இடதுசாரி அரசாங்கம் அந்த நகர்வுகளையே முன்னெடுத்துச் செல்கிறது. இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குவாரிகளை முறைப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இடுக்கியில் 1,500 சதுர அடி வரையிலான அனுமதியற்ற கட்டுமானங்களை அரசு முறைப்படுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போதைய கனமழை பெய்யத் தொடங்கியது என்பது அச்சுறுத்தலாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.
காட்கில் குழு அறிக்கையின் படி சூழலியல் ரீதியாக உணர்திறன் உள்ள இடங்கள்
மண்டகோல்
பணத்தடி
பைதல்மாலா
பிரம்மகிரி – திருநெல்லி
வயநாடு
பாணாசுர சாகர் – குட்டியடி
நீலம்பூர் – மேம்பாடி
சைலண்ட் வேலி - புதிய அமரம்பலம்
சிறுவாணி
நெல்லியம்பாடி
பீச்சி – வாழனி
அதிரப்பள்ளி – வாழச்சல்
பூயம்குட்டி – மூணாறு
ஏலக்காய் மலைகள்
பெரியார்
குளத்துப்புழா
அகஸ்திய மாலா
ஒருவேளை மாதவ் காட்கல் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி இருந்தால், இன்று இவ்வளவு பேரழிவையும் தடுத்திருக்கலாம். விலை மதிப்பற்ற மனித உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாமே என்பதே மறுக்க முடியாத உண்மை..