
நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொருட்களின் மீது திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லரை விலையை(எம்.ஆர்.பி.) அச்சிட வேண்டும் அவ்வாறு அச்சிடாவிட்டால் உற்பத்தி நிறுவனங்கள், கடை உரிமையளர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
குழப்பம்
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததில் இருந்து, ஏராளமான பொருட்கள் மீது பழைய எம்.ஆர்.பி. விலை இருப்பதால், அது விற்பனை செய்யமுடியாமல் உற்பத்தி நிறுவனங்களிடம் தேங்கிக்கிடக்கின்றன.
இதனால், பொருட்களை எப்படி விற்பனை செய்வது என்றும், விலை எப்படி மாறுகிறது என்றும் சில்லரை வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
அறிவிப்பு
இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிவிப்பைவௌியிட்டுள்ளது.
புதிய விலை
அதன்படி, விற்பனை செய்யப்படாமல் தேங்கி இருக்கும் அனைத்துப் பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான விலை மாற்றம் செய்யப்படாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
அதன் அருகே, ஜி.எஸ்.டி.க்கு பின், திருத்தப்பட்ட விலையை ஸ்டிக்கரில் ஒட்ட வேண்டும். ஒவ்வொரு பொருளிலும் புதிய, பழைய எம்.ஆர்.பி. விலைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இருப்பில் இருந்த பொருட்களின் பழைய விலையும், ஜி.எஸ்.டிக்கு பின் குறிப்பிடப்பட்ட விலையும் நுகர்வோர்களுக்கு தெரியுமாறு ஒட்ட வேண்டும். அரசு குறிப்பிட்ட வரிக்கு அதிகமாக பொருட்களின் மீது வரி இருக்க கூடாது. ஜி.எஸ்.டி.க்கு முந்தைய உண்மையான விலைப்பட்டியல் மீது புதிய விலையை ஒட்டக்கூடாது.
செப். 30ந்தேதி
இந்த மாற்றங்களை செப்டம்பர் 30ந் தேதிக்குள் உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய, பழைய விலையும் வேண்டும்
இது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர்அவிநாஷ் வஸ்தவா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தபின், பொருட்களின் மீது புதிய எம்.ஆர்.பி. விலையையும், பழைய எம்.ஆர்.பி. விலையையும் அச்சிடுவது அவசியம்.
உற்பத்தியாளர் அல்லது பொருட்களை பேக்கிங்செய்வோர் அல்லது இறக்குமதி செய்பவர்கள் பொருட்களின் விலையை உயர்த்துவதாக இருந்தால், குறைந்தபட்சம் 2 அல்லது 3 நாளேடுகளில் விலை உயர்வு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
இவை அனைத்தும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் உற்பத்தியாளர்கள் செய்து முடிக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் இருந்து, அனைத்து பொருட்களின் மீதும்ஜி.எஸ்.டிக்கு முந்தைய விலை, ஜி.எஸ்.டி. விலை ஆகிய இரண்டும் இடம் பெற வேண்டும்.
அவ்வாறு இல்லாத பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது. உற்பத்தியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.