
பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவுக்கு எதிரானது. மாட்டிறைச்சி குறித்து பிரதமர் மோடி தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று சிவ சேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
தாக்குதல் சம்பவங்கள்
பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான ஜார்கண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக மாட்டிறைச்சி வைத்து இருப்பவர்கள் மீதும், மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்பவர்கள் மீதும் பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடியும் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் ஆளும் பா.ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவ சேனா தனது கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து தலையங்கள் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
உணவுப்பழக்கம்
மாட்டிறைச்சி சாப்பிடுவது என்று ஒருவரின் உணவுப்பழக்கத்தோடும், வர்த்தகத்தோடும், வேலைவாய்ப்போடும் தொடர்புடையது. பசுக்களை நேற்றுவரை பாதுகாத்து இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இருந்தவர்கள், இன்று கொலைகாரர்களாக மாறி இருக்கிறார்கள்.
இந்துத்துவாவுக்கு எதிரானது
பசு பாதுகாவலர்களைக் கண்டித்த பிரதமர் மோடியின் நிலைப்பாட்ைட நாங்கள் பாராட்டுகிறோம். பசுபாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து யாரும் செயல்படக்கூடாது. பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், பசு பாதுகாவலர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவத்துக்கு எதிரானது.
மோடிக்கு பாராட்டு
இந்துத்துவா குறித்து தௌிவாகக் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவிக்கிறோம். நாட்டில் மாட்டிறைச்சி தொடர்பாக நிலவி வரும் பதற்றத்தை தணிக்க தேசிய அளவிலான கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.