
மூன்று நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தார். இந்தியப் பிரதமரின் வருகைக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் சென்றடைந்த மோடியை பென் குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உற்சாகமாக வரவேற்றார். எனது நண்பரே வருக! என்று நெதன்யாகு, ஹிந்தியில் கூறி வரவேற்பளித்தார்.
தொடர்ந்து பேசிய நெதன்யாகு, மோடி ஒரு சிறந்த இந்தியத் தலைவர் மற்றும் ஒரு சிறந்த உலகத் தலைவர். இந்தியப் பிரதமர் ஒருவர் எங்கள் நாட்டுக்கு வருகை புரிய வேண்டும் என்று நாங்கள் கடந்த 70 ஆண்டுகளாகக் காத்திருந்தோம் என்று கூறி மோடியை கட்டித் தழுவிக்கொண்டார்.
விமான நிலையத்தில் சுருக்கமாகப் பேசிக் கொண்ட அவர்கள் இருவரும் அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதம் போன்ற பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ளவும் உறுதிபூண்டனர்.
இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர், போப் ஆண்டவர் ஆகியோர் வந்தால் மட்டுமே அந்நாட்டு பிரதமர் நேரில் சென்று வரவேற்பார் என கூறப்படுகிறது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக மோடியை வரவேற்க நெதன்யாகுவும் இஸ்ரேல் அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். தொடர்ந்து அங்கு மோடிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.