
அனைத்து மதுபானங்களையும் விட, குறைந்த ஆல்கஹால் மட்டுமே கொண்ட பீர் உடல் நலத்துக்கு நல்லது என்று ஆந்திர அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவகர் கூறியுள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜவஹர், மற்ற ஹாட் டிரிங்க்சை விட பீர் தான் உடல் நலத்துக்கு நல்லது என தெரிவித்தார்.
அதற்கு காரணம் . பீரில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது என தெரிவித்த அமைச்சர்,. மற்ற மதுபானங்களை விட பீர் விற்பனையை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும், பல திட்டங்களை செயல்படத்த உள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்டு கூட்டத்தில் உள்ளவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சமாளித்த அமைச்சர் ஜவகர், பீர் உடல் நலத்துக்கு நல்லது என்று நான் சொல்லவரவில்லை. மாறாக, மற்ற மதுபானங்களோடு ஒப்பிடும் போது குறைந்த ஆல்கஹால் இருப்பதால் பீர் நல்லது என்று தான் சொல்கிறேன் என கூறினார்.
ஏற்கனவே, விற்பனையில் இருக்கும் பல பெரிய நிறுவனங்களின் பீர்களை விட, குறைந்த ஆல்கஹால் இருக்கும் உள்ளூரில் உற்பத்தியாகும் பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குடிக்கும் மக்களின் பழக்கத்தை மாற்ற முடியாது என கூறிய அமைச்சர் ஜவஹர் அவர்களை குறைந்த ஆல்கஹால் இருக்கும் மதுபானத்தைக் குடிக்க வைக்க முடியும் என்பதற்காகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
ஆந்திராவில் கடவுள் பெயரில் இயங்கும் மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கப் போவதாகவும் அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவகர் அதிரடியாக தெரிவித்தார்.