
நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியால்(ஜி.எஸ்.டி) மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படும் சமையல்கியாஸ் சிலிண்டர் விலை 32 ரூபாய் அதிகரித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வாகும்.
இதன்படி, டெல்லியில் மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட, சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ. 446.65 காசுகள் இருந்த நிலையில், ஜி.எஸ்.டி.க்கு பின் ரூ.477.46 காசுகளாக உயர்ந்துள்ளது.
மானிய சிலிண்டர்
மத்திய அரசின் திட்டப்படி ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தினருக்குஆண்டுக்கு 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு12 சிலிண்டர்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு முன் மறைமுக வரிகள் இருந்த காலத்தில், விற்பனை வரி, தொழிற்சாலை வரி என விதிக்கப்பட்டது, ஆனால், உற்பத்தி வரி நாடுமுழுவதும் சமையல் கியாஸ்சிலிண்டருக்கு ரத்து செய்யப்பட்டு இருந்தது.
வாட் வரி இல்லை
பல மாநிலங்களில் வாட் வரி இல்லாமல், விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பாக டெல்லி, சண்டிகார், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், தமிழகம் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் , மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் வாட்வரி இல்லை. சில மாநிலங்களில் மட்டும் 1 முதல் 5 சதவீதம் வரை வாட் வரி விதிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி
இந்நிலையில், நாடுமுழுவதும் கடந்த 1-ந் தேதி அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியில் மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படும், சமையல் கியாஸ்சிலிண்டருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இது இதற்கு முன் மாநிலங்கள் விதித்த வாட் வரியைக் காட்டிலும் மிக அதிகமாகும்.
விலை உயர்வு
இதன்படி, மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் டெல்லியில் ரூ.31.67 காசு உயர்த்தப்பட்டு ரூ.480.32 காசுகளாகவும், கொல்கத்தாவில்ரூ.31.42 காசு உயர்த்தப்பட்டு ரூ.465.56 காசுகளாகவும் உயர்ந்தது. சந்தை விலையில்14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.564 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இதற்கு முன் வாட் வரி 3 சதவீதம் இருந்த நிலையில், ஜி.எஸ்.டி.யில்5சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டர் ஒன்றுக்கு அங்கு ரூ.14.28 காசு அதிகரித்து, ரூ.491. 25 காசுகளாக அதிகரித்தது.
6 ஆண்டுகளுக்குப் பின்
இந்த விலை உயர்வு கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதிக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். அப்போது சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ரூ. 50 உயர்த்தப்பட்டது. அதன்பின் இப்போது ரூ. 32 அதிகரித்துள்ளது.