
நீட் எனப்படும் தேசிய அளவிலான மருத்துவ பொதுநுழைவுத் தேர்வில் உருது மொழியை சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் கடுமையாக எதிர்க்கும் நீட் எனப்படும் தேசிய அளவிலான மருத்துவ பொதுநுழைவுத் தேர்வு வரும் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தத் தேர்வை எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நீட் தேர்வுக்கான மொழிகள் பட்டியலில் உருது சேர்க்கப்படாதை எதிர்த்து மாணவர் இஸ்லாமிய அமைப்பு என்ற இயக்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்களின் தாய் மொழியான உருது மொழியிலும் மேற்கண்ட தேர்வுகளை எழுத அனுமதி அளிக்க வேண்டும் என மாணவர் இஸ்லாமிய அமைப்பு என்ற இயக்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீட் தேர்வுக்கு இன்னும் 4 தினங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும்படியும் மனுதாரர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி,மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.இதையடுத்து, இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.