
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சலூன் கடைக்காரர் ரூ.3.2 கோடியில் மெர்சடீஸ்பென்ஸ் நிறுவனத்தின் ‘மேபேக்’ ரக காரை வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
150 கார்கள்
சலூன் கடையும், சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் ரமேஷ் பாபுவுக்கு சொந்தமாக 150 கார்கள் இருக்கிறதாம். இதில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ், 11 மெர்சடீஸ்பென்ஸ் கார், 10 பி.எம்.டபில்.யு., 3ஆடி கார், 2 ஜாக்குவார் ஆகிய கார்கள் இவரிடம் இருக்கின்றன.
ஏழ்மை குடும்பம்
இது குறித்து சலூன் கடையும், சொந்தமாக டிராவல்ஸ் நடத்தும் ரமேஷ் பாபு கூறுகையில், “ எனக்கு 9 வயதாகும்போது எனது தந்தை மரணமடைந்துவிட்டார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த என்னை எனது தாய் மிகுந்த சிரமப்பட்டு வளர்த்தார்.
சலூனை மறக்கமாட்டேன்
கடுமையாக உழைத்த எனக்கு இறைவன் இந்த வசதிகளை கொடுத்து இருக்கிறார். என்னுடைய கனவு எல்லாம், அனைத்து ஆடம்பரமான, விலை உயர்வான கார்களை வாங்க வேண்டும் என்பதுதான்.
இருந்தபோதிலும், எனக்கு வறுமையில் சாப்பாடு போட்ட சலூன் கடையை எப்போதும் மறக்கமாட்டேன். இப்போதும் நான் நடத்தும் எனது சலூன் கடையில் எனது வாடிக்கையாளர்களுக்காக தினமும் 5 மணிநேரம் வேலை செய்கிறேன்.
மல்லையாவுக்கு பின்
நான் இப்போது ரூ.3.2 கோடிக்கு வாங்கிய மெர்சடீஸ் மேபாக் காருக்கான பணம் எனது சொந்தபணத்திலும், வங்கிக்கடனிலும் வாங்கப்பட்டது.
இந்த கார் விஜய்மல்லையாவுக்கு பின் என்னிடம் மட்டுமே இருக்கிறது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. என்னிடம் விலை உயர்ந்த 150 கார்கள் இருக்கின்றன. இந்த கார்களை எனது டிராவல்ஸ் நிறுவனம் மூலம் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுகிறேன்'' என்கிறார்.