
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துரித உணவு நிறுவனமான ‘மெக்டோனல்ட்ஸில்’உருளைக்கிழங்கு பிரெஞ்சு ஃபிரையில் பல்லியின் வறுவலும் இருந்தது கண்டு ஆர்டர் செய்த கர்பிணி பெண் அலறியடித்து ஓடினார்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிரியங்கா மொய்திரா. இவர் தற்போது 6 மாதம் கர்பிணியாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி நகரில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த மெக்டோனல்ட்ஸ் பாஸ்ட்புட் கடையில் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு பிரெஞ்சு ஃபிரை ஆர்டர் செய்து இருந்தார்.
அந்த கடையின் சர்வரும் அந்த பிரெஞ்சு ஃபிரையை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். அதை பிரித்துப் பார்த்த பிரியங்காவுக்கு படுபயங்கரமான அதிர்ச்சி காத்திருந்தது. அதில் உருளைக்கிழங்கு வருவலோடு பல்லியையும் சேர்த்து வறுத்து இருந்தனர். இதைக் கண்டு அலறியடித்து அங்கிருந்து பிரியங்கா நகர்ந்தார்.
இது குறித்து மெக்டோனல்ட்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கடுமையாக பிரியங்கா வாதம் செய்தார். அவர்களும் பிரியங்காவை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அவர் இது குறித்து போலீசிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து போலீசார் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் மீது கவனக்குறைவாக செயல்பட்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உணவு தயாரித்தது உள்ளிட்டபிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து பிரியங்கா மொய்திரா கூறுகையில், “ நான் இப்போது 6 மாதம் கர்பிணியாக இருக்கிறேன். ஆசைப்பட்டு உருளைக்கிழங்கு பிரெஞ்சு ஃபிரை சாப்பிட ஆர்டர்செய்தேன். ஆனால், இந்த ஃபிரையில் உருளைக்கிழங்கோடு, பல்லியையும் சேர்த்து வறுத்து கொடுத்தார்கள். இதை என் குழந்தை சாப்பிட்டு இருந்தால், என்ன நடந்திருக்கும், நினைக்கவே பயமாக இருக்கிறது. இதனால் போலீசிடம் புகார் செய்தேன்'' என்றார்.