அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்: இதுதான் காரணம் - மத்திய அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

By Manikanda Prabu  |  First Published Oct 30, 2023, 5:01 PM IST

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு தீவிர உடற்பயிற்சி ஓட்ட பயிற்சியை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்


அண்மைக்காலமாகவே மாரடைப்பு மரணங்கள் தொடர்பான செய்திகள் நம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளன. குறிப்பாக, இளம் வயதினர் மாரடைப்பால் அதிகமாக உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது, பொதுவெளியில் பேசிக் கொண்டிருக்கும் போது அப்படியே சரிந்து விழுந்து உயிரிழப்பவர்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பொது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, நவராத்திரி கொண்டாட்டங்களையொட்டி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கர்பா நடன கொண்டாட்டங்களின்போது, 24 மணி நேரத்தில் 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். அதில், 13 வயது சிறுவனும் ஒருவன்.

Latest Videos

undefined

இந்த நிலையில், தனது சொந்த மாவட்டமான குஜராத் மாநிலம் பாவ்நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,  தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு தீவிர உடற்பயிற்சி ஓட்ட பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. அதில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.  கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் உழைப்பைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.” என்றார்.

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!

மேலும், கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும், ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்றும் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2022இன் பிற்பகுதியில் இருந்து 20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகம் பதிவாகி வருகிறது. இந்த உயிரிழப்புகளை கொரோனா அல்லது அது தொடர்புடைய சிகிச்சையுடன் பலரும் தொடர்புப்படுத்தி பேசி வரும் நிலையில், மத்திய அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

click me!