தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு!

By Manikanda Prabu  |  First Published Jul 13, 2023, 5:00 PM IST

தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது


நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், நுகர்வோருக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய நகரங்களில் தக்காளியை கொள்முதல் செய்து தள்ளுபடி விலையில் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மண்டிகளில் இருந்து தக்காளியை உடனடியாக கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்புகளுக்கு மத்திய  நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

கொள்முதல் செய்யப்படும் தக்காளிகளை, கடந்த மாதத்தில் மட்டும் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ள முக்கிய நுகர்வு மையங்களில் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தள்ளுபடி விலை தக்காளி நாளைக்குள் தலைநகர் டெல்லியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த பதினைந்து நாட்களில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த சந்தைகளில் தக்காளி விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் உணவுப் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஜூன் 24ஆம் தேதி கிலோ ஒன்றுக்கு ரூ.30-50 என விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.100 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது.

செங்கோட்டைக்குள் புகுந்தது வெள்ளம்: டெல்லியில் தொடரும் சிக்கல்!

தக்காளியின் விலை உயர்வு மற்றும் நுகர்வோர் நடத்தைகள் குறித்த ஆய்வில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 311 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 75 சதவீத குடும்பங்களில் தக்காளி நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், 7 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களில் தக்காளி வாங்குவதையே நிறுத்தி விட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த பின்னணியில் தக்காளியை தள்ளுபடி விலையில் விற்கும் மத்திய அரசின் முடிவு, தக்காளி நுகர்வை ஓரளவுக்கு மீண்டும் தொடங்க குடும்பங்களுக்கு உதவும் என தெரிகிறது.

டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மண்டியில் உள்ள வியாபாரிகள் கூறுகையில், தக்காளி வரத்து வழக்கத்தை விட 25 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பர்கர்கள் மற்றும் ரேப்கள் போன்ற உணவுப் பொருட்களில் தக்காளியை தற்காலிகமாக பயன்படுத்த வேண்டாம் என McDonald's நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் தக்காளியின் முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் சுமார் 58 சதவீதம் அவை பங்களிக்கின்றன. பொதுவாக தக்காளியின் அறுவடை காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இருக்கும். பருவமழை பெய்யாதது மற்றும் பீகோமோவைரஸால் ஏற்படும் இலை சுருட்டு நோய் தாக்குதலால் உற்பத்தி குறைந்துள்ளது. மோசமான காலநிலையும் தற்காலிக விநியோகச் சங்கிலியை சீர்குலைத்து, அடிக்கடி விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கிறது. அதுதவிர, வெவ்வேறு மாநிலங்களில் தக்காளி நடவு சுழற்சியும் மாறுபடும்.

அந்த வகையில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட தக்காளி விரைவில் வரும் எதிர்பார்க்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் நாராயணன்கான் மற்றும் அவுரங்காபாத் பெல்ட்டில் இருந்து கூடுதல் சப்ளை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் தக்காளி வரத்து விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.

click me!