மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் தோற்றுப்போன உத்தவ் தாக்கரே அரசு.. ராணுவத்தை களமிறக்க வேண்டிய கட்டாயம்?

By karthikeyan VFirst Published Apr 18, 2020, 9:20 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், கொரோனா தடுப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியாமல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி கூட்டணி ஆட்சி தோற்றுப்போயிருக்கிறது.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிராவில் 3300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா உறுதியானது முதலில் கேரளாவில்.. அடுத்தது மகாராஷ்டிராவில் தான்..

மகாராஷ்டிராவும் கேரளாவும் மார்ச் மாத இறுதிவரை கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் இருந்தன. இந்த இரு மாநிலங்களும் தான் கொரோனா பாதிப்பில் முதலில் இரட்டை சதமடித்தன. ஆனால் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து கேரளா அரசு, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதன் விளைவாகவும் தீவிரமான சிகிச்சையின் விளைவாகவும் அதிகமானோரை குணப்படுத்தியது மட்டுமல்லாமல், மேலும் அதிகமானோருக்கு பரவாமல் தடுத்தும் விட்டது. 

ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக 13 நாட்கள் தாறுமாறாக உயர்ந்து, மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில், கிட்டத்தட்ட மகாராஷ்டிராவை நெருங்கி கொண்டிருந்த தமிழ்நாடும் கூட, தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பரிசோதனை எண்ணிக்கை vs பாதிப்பு எண்ணிக்கை விகிதம் குறைந்துவிட்டது. அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிப்பு உள்ளது. 

கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலும், தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதுடன், அதிகமானோர் குணமடைந்தும் உள்ளனர். ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாட்டில் 103 பேரும் 18ம் தேதி 82 பேரும் குணமடைந்துள்ளனர். மொத்தமாக தமிழ்நாட்டில் 365 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 1.1% மட்டுமே. ஆனால் மகாராஷ்டிராவில் இறப்பு விகிதம் 6.5%லிருந்து 7%ஆக உள்ளது. 

மகாராஷ்டிரா அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பின்மையும் திறம்பட கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளாததுமே காரணமாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நகரமான மும்பையில், லட்சக்கணக்கானோர் வசிக்கக்கூடிய அடர்ந்த குடிசைப்பகுதியான தாராவியிலும், கோவிந்தியிலும் கொரோனா புகுந்துவிட்டது. இந்த நெருக்கடியான மற்றும் சவாலான சூழலை எதிர்கொள்ள முடியாமல் உத்தவ் தாக்கரே அரசு திணறுகிறது.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மகாராஷ்டிராவில் மாவட்ட வாரியாக அமைச்சர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பணிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து ஆட்சியாளர்கள் களத்தில் இறங்கி திறம்பட செயல்பட தவறியதன் விளைவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மும்பையில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்காததால், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிந்த நிலையில், ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டதும், வெளிமாநில தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரே ஸ்டேஷனில் குவிந்தனர். ஏற்கனவே மும்பையில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக இருக்கும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் குவிந்தது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதுவும் மாநில அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட பிரச்னை தான்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில், 23.9% பங்குவகிப்பது மகாராஷ்டிரா. அதேபோல தேசிய அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 44.3 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரா மாநிலத்தவர்கள். இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 7%. மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவுள்ள நிலையில் பரிசோதனை எண்ணிக்கையையும் அம்மாநில அரசு இன்னும் பெரியளவில் அதிகப்படுத்தவில்லை. 50 ஆயிரம் பேரை மட்டுமே பரிசோதித்துள்ளனர்.

தாராவியும் கோவிந்தியும் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் சவாலாக திகழ்கிறது. மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா  புகுந்த நிலையில், அதை கட்டுப்படுத்த உத்தவ் தாக்கரே அரசால் முடியாது என்பதால் ராணுவத்தை களமிறக்கி, தாராவி, கோவிந்தி பகுதியில் சுமார் 10 லட்சம் பேரையாவது பரிசோதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

click me!