புதுசா அச்சிட்ட ரூ.1.20 லட்சம் கோடியை புழக்கத்தில் விட்ட ஆர்பிஐ.. எல்லா ஏடிஎம்களிலும் பணம் கிடைக்க நடவடிக்கை

By karthikeyan VFirst Published Apr 18, 2020, 4:39 PM IST
Highlights

கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆர்பிஐ பணப்புழக்கத்தை உறுதி செய்துள்ளது.
 

இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுத்து, கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபடும் பணிகளை மேற்கொள்வதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரமே முற்றிலுமாக முடங்கிய நிலையில், மீண்டும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இம்முறை, கடந்த ஊரடங்கை போல அல்லாமல் தொழில்துறையினருக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல விவசாய பணிகள், மெக்கானிக் பணிகளும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ், ஊரடங்கால் இந்தியாவில் அனைத்து தொழில்துறைகளும் முடங்கியிருப்பதால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை எதிர்கொள்ள ஆர்பிஐ தயாராக இருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் வங்கி பணிகள் வழக்கம்போல நடைபெறும். அனைத்து வங்கிகளும் வங்கிக்கடனை தாராளமாக வழங்கலாம். ஊரடங்கால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படாது.  பணப்புழக்கத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அதேபோலவே அனைத்து வங்கிகள், பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் தடையின்றி கிடைக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருப்பதால், நீண்ட தூரம் செல்ல முடியாது. எனவே அருகில் உள்ள ஏடிஎம்களை தான் பணத்திற்காக நாடமுடியும் என்ற சூழல் உள்ள நிலையில், மக்கள் பணம் கிடைக்காமல் தவிப்பதை தவிர்க்கும் விதமாக ஏடிஎம்களில் பணம் கிடைக்கின்றன.

ஆர்பிஐ, கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை அச்சிடப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில்  விட்டுள்ளது. இந்த பணம், அனைத்து வங்கிகளின் கருவூலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஊரடங்கு காலத்திலும் கூட, ஏடிஎம்களில் பணம் தொடர்ந்து நிரப்பப்பட்டுவருகிறது. அதனால் மக்களுக்கு பணம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. பணப்புழக்கத்திலும் எந்த சிக்கலும் இல்லை. ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஏஜென்சிகளும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் செயல்பாட்டிலும் எந்த பிரச்னையும் இல்லை. 

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 150 பேர் தனித்தனி இடங்களில் இருந்துகொண்டே, பணப்புழக்கம், பணப்பரிவர்த்தனை, நிதிச்சந்தை நடவடிக்கைகள் ஆகியவை சீரான முறையில் நடப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த பணிகளை எல்லாம் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர். 

ஊரடங்கு அமலில் இருக்கும் நெருக்கடியான சூழலில், நாட்டில் பணப்புழக்கத்தை உறுதி செய்ய ஆர்பிஐ எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
 

click me!