இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான முதல் போலீஸ் ஆஃபிஸர்.. பஞ்சாப்பில் உதவி ஆணையர் உயிரிழந்த சோகம்

By karthikeyan VFirst Published Apr 18, 2020, 3:37 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனாவால் காவல்துறையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் உதவி ஆணையர் அனில் கோலி என்பவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஊரடங்கால் கொரோனாவிற்கு பயந்து அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் சுயநலமின்றி, உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றிவருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதேபோலவே மக்களின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் சீரியஸாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் காவல்துறையினரும் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.

கொரோனா அச்சத்தால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள வேளையில், தங்களுக்கு நோய் தொற்றிவிடுமோ என்ற பயமில்லாமல், மக்களுக்காக பணியாற்றும் இவர்கள் ஒவ்வொருவருமே போற்றப்பட வேண்டியவர்கள். 

அவர்களுக்கான பாதுக்காப்புக்காக எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மக்கள் உயிர்களை காக்க போராடும் டாக்டர்களின் உயிரைக் காக்க அவர்களுக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. 

ஆந்திராவில் ஒரு காவல்துறை அதிகாரி, தனது தாயின் இறுச்சடங்கிற்கு கூட செல்லாமல், மக்கள் பணியாற்றினார். இந்நிலையில், பஞ்சாப்பின் லூதியானா நகரில் காவல்துறை உதவி ஆணையராக இருந்த அனில் கோலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இவர் தான் கொரோனாவிற்கு பலியான முதல் காவல்துறை அதிகாரி. மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றிய காவல்துறை அதிகாரி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் இதுவரை வெறும் 186 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காவல்துறை அதிகாரிதான் பஞ்சாப்பில் கொரோனாவிற்கு பலியான 14வது நபர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவான பேரே பஞ்சாப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 14 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!