
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில், வருகிற 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், விடுமுறை தினங்கள் என்பதாலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் பிரம்மோற்சவ வைபவமும் நடைபெறவுள்ளதால் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் மாற்றம்!
இந்த நிலையில், திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு நாளை முதல் 26ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அரசு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.