ஒடிசா ரயில் விபத்து: உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்த தன்னார்வலர்கள்!

By Manikanda Prabu  |  First Published Oct 12, 2023, 3:03 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த உரிமை கோரப்படாத உடல்களை பெண் தன்னார்வலர்கள் தகனம் செய்தனர்


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 294 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த உரிமை கோரப்படாத 28 உடல்களை பெண் தன்னார்வலர்கள் தகனம் செய்துள்ளனர். விபத்து நடந்து 4 மாதங்களாகியும் யாரும் உரிமை கோராததால் அவர்களது உடல்கள் தன்னார்வலர்களால் தகனம் செய்யப்பட்டன.

Tap to resize

Latest Videos

தகனம் செய்வதற்கான செயல்முறை செவ்வாய் மாலை தொடங்கி புதன்கிழமை காலை 8 மணியளவில் நிறைவடைந்தது என்று புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) மேயர் சுலோச்சனா தாஸ் தெரிவித்துள்ளார். இறுதிச் சடங்கில் தாங்களாகவே முன்வந்து பெண் தன்னார்வலர்கள் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சமூக இழிவை பொருட்படுத்தாமல் பெண் தன்னார்வலர்கள் முன் வந்து இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இந்த உடல்களின் அடையாளங்கள் தெரியவில்லை.” என மேயர் சுலோச்சனா தாஸ் தெரிவித்துள்ளார். உடல்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்கப்படட்டிருந்ததாகவும், அனைத்து உடல்களும் பாரத்பூர் சுடுகாட்டில் பிஎம்சியால் தகனம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பெண் தன்னார்வலர்களான மதுஸ்மிதா பிரஸ்டி (37), ஸ்மிதா மொஹந்தி (53), ஸ்வாகதிகா ராவ் (34) ஆகியோர் முதல் மூன்று உடல்களை தகனம் செய்தனர். “அடையாளம் தெரியாத உடல்களுக்கு இந்த புனித சடங்கை செய்ய நாங்களே முன்வந்தோம். அவர்கள் சிலர் முன் ஜென்மத்தில் எங்கள் உறவினராக கூட இருந்திருக்கலாம்.” என மதுஸ்மிதா பிரஸ்டி கூறினார்.

ஜாகேஷ்வர் தாம் சிவன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

“உடல்கள் அடையாளம் காண முடியாத அளவில் இருந்தன. அவை ஆணா அல்லது பெண்ணா என்பதை கூட யாராலும் அடையாளம் காண முடியாது.” என்று ஸ்வாகதிகா ராவ் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 4ஆம் தேதி இரவு மருத்துவமனைக்கு 123 உடல்கள் வந்தன. பின்னர் தலைமை மருத்துமனைகள், தனியார் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த 39 உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டன. அவைகளில் 81 உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 53 உடல்கள் டிஎன்ஏ மூலம் உறுதிசெய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டன. மீதமிருந்த உரிமை கோரப்படாத 28 உடல்கள் இறுதிச் சடங்குகள் நடத்துவதற்காக பிஎம்சியிடம் அக்டோபர் 10ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!