திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு..10 நாட்களில் 26 கோடி ரூபாய் வசூல்.. 3.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்..

By Thanalakshmi VFirst Published Jan 24, 2022, 4:48 PM IST
Highlights

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 13 தேதி முதல் 22 ஆம் தேதிவரை உண்டியல் காணிக்கையாக மட்டும் 26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாள்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டன. இந்த 10 நாள்களும் 3.79 லட்சம் பக்தர்கள் பரமபதவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களுக்கு 15.14 லட்சம் லட்டுகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. உண்டியல் காணிக்கையாக 26.61 கோடி ரூபாய் வசூலாகியிருக்ககிறது.

இதன்படி வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் கடைசி நாளான நேற்று இரவு வரை சொர்க்கவாசல் திறந்திருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்தனர். இதில் உண்டியல் காணிக்கையாக மட்டும் நேற்று ஒரே நாளில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பதில் அடுத்தாண்டு (2023) இரண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. அப்போது ஜனவரி 2ம் தேதியும், டிசம்பர் 23ம் தேதியும் இருமுறை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக 20 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

10 நாள்களில் 69,117 வாகனங்கள் திருமலைக்கு வந்துள்ளன. 42,809 தங்கும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் 14.68 கோடி ரூபாய் தேவஸ்தானத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது. 1.23 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 4.58 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளன. 14,643 பேருக்கு காஃபி, டீ, பால் வழங்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 4.25 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 13,829 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும் 10 நாட்களும் ஒவ்வொரு நாளும் 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திருப்பதி மலையில் உள்ள அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து இலவச உணவு கிடைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நாட்டில் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 36 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது.

click me!