ஏலம் விடும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்… இலங்கை அரசுக்கு செந்தில் தொண்டமான் கோரிக்கை!!

By Narendran SFirst Published Jan 24, 2022, 4:08 PM IST
Highlights

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது என்ற இலங்கை அரசின் அறிவிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமேசுவரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், மன்னார், உள்ளிட்ட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படுவதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பில், காரைநகர் – 65, காங்கேசன்துறை – 05, கிராஞ்சி -24, தலைமன்னார் – 09, கற்பிட்டி – 02 என 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது. வருகிற பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஏலம்  நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் வரும் 7 ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறைந்த அளவு கடற்பரப்பில் இருப்பதனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவது முற்றிலும் அறியா செயலாகும். அவர்கள் மீன் பிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே கடற்பரப்புக்குள் வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முடிவை கடற்தொழில் அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில் இருநாட்டு மீனவ சமுதாயத்திற்கு இடையில் நட்புறவு வலுப்படும். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீனவர்கள் படகில் தொழிலுக்கு செல்ல முடியாமல் பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு வழிவகுக்கும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடும்போது மீனவ சமுதாயத்தினர் மேலும் வாழ்வாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழலலும் ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் மீனவ சமுதாயத்திற்கு இந்த நடவடிக்கை ஒரு முட்டுக்கட்டையாக அமையும். எனவே இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடற்தொழில் அமைச்சிக்கு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!