
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பதி பாலாஜி கோயில் ஜம்முவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி காட்சி மூலம் கோயிலை திறந்து வைத்தார்.
உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கின்றனர். நாளுக்கு நாள் பெருமாளை தரிசிக்க வரும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருவதால் கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனை களையும்பொருட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை, டெல்லி, புவனேஸ்வர், கன்னியாகுமரி ஹைதராபாத் ஆகிய ஐந்து இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஆறாவதாக ஜம்முவின் மஜீன் பகுதியில் எழில்மிகு ஷிவாலிக் வனப்பகுதியின் மத்தியில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு வந்தது. இதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் பரப்பளவு நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஆண்டு வழங்கியது. இந்த இடத்தில் சுமார் ரூ.33 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டு வந்தது,. கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயில் அமைந்திருக்கும் ஜம்மு - கத்ரா பகுதிகளுக்கு இடையே இந்த ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. ஜம்முவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைஷ்ணோ தேவி கோவில் மற்றும் அமர்நாத் யாத்திரை போன்ற புகழ்பெற்ற மத சுற்றுலா தளங்களுடன் இணைக்கப்பட்டு சுற்றுலா சர்க்கியூட்டாக மாற்றப்படும் எனவும் தெரிகிறது. இதன் விளைவாக ஜம்மு யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.
தலைமை செயலாளர் இறையன்பு செய்த தரமான சம்பவம்!
திருப்பதி கோயிலில் எந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைகள் ஜம்மு கோயிலிலும் பின்பற்றப்படு என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.