பீகார் தலைநகர் பாட்னாவில் வரும் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பீகார் முதல்வரும், ஒருங்கிணைந்த ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் கூடவும், 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கவும் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்திக்கு நிதிஷ்குமார் தொலைபேசியில் அழைப்பு விடுத்து இருக்கிறார். இதை ஏற்றுக் கொண்டு இவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் தகவலை ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலன் சிங் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உறுதி செய்துள்ளனர். முன்பு இந்தக் கூட்டம் ஜூன் 12ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி தங்களை முன்பே கலந்தாலோசிக்கவில்லை என்று கூறியது. இதையடுத்து இந்தக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா, சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ- எம்எல் திபாங்கர் பட்டாச்சார்யா ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதை தேஜஸ்வி யாதவ் உறுதி செய்து இருக்கிறார்.
வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதே இவர்களது திட்டம். மொத்தமுள்ள 543 மக்களவைக்கான இடங்களில் 450 இடங்களில் பாஜகவுடன் நேருக்கு நேர் போட்டியிட இருப்பதாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து கசியும் தகவல்கள் கூறுகின்றன. பாஜகவுக்கு எதிரான ஒரு வாக்கு கூட சிதறக் கூடாது என்று திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எவ்வாறு என்பது குறித்து பாட்னாவில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதாவது பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகள் களத்தில் நேருக்கு நேர் மோதுவது, பாஜகவுடன் சில மாநிலங்களில் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதுவது என்று திட்டமிட்டுள்ளனர். அப்படி பார்க்கும்போது, சில மாநிலங்களில் பாஜக இல்லாமல், காங்கிரசுக்கு என்று எதிர்க்கட்சிகள் களத்தில் இருக்கின்றன. உதாரணத்திற்கு மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும்கட்சியுடன் கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ், அங்கு எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.
நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்!
பாஜகவை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியாமல் இல்லை. ஆட்சிக்கு வந்த இந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கிராமங்கள் தோறும் தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. பூத் கமிட்டிகள் அமைத்து, தேர்தலின்போது ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று பாஜக தனது செயல்பாடுகளை, எதிர்கால திட்டங்களை விவரிக்கிறது. இதற்கென்றே தனி காரியகர்த்தாக்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி, பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் அமைப்புகளும் தேர்தல் களத்தில் பாஜகவுக்கு கடுமையாக உழைக்கின்றன. தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பு இருந்தே திட்டமிட்டு செயல்படுகிறது.
இத்துடன் கடந்த தேர்தல் வரை பாஜகவுக்கு எதிராக பணியாற்றி வந்த ஆந்திரா முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் பாஜகவுடன் கைகோர்த்து இருக்கிறார். இவர்களது கூட்டணி எந்தளவிற்கு ஆந்திராவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி கையில் இருக்கிறது.
இதற்கிடையே முன்னாள் பிரதமரும், ஜேடியு தலைவருமான தேவகவுடா எதிர்கட்சிகளின் கூட்டத்தை விமர்சித்துள்ளார். ''பாஜகவுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்பில் இல்லாத ஒரு கட்சியை காட்டுங்கள், அதற்குப் பின்னர் நான் பதிலளிக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலரும் பாஜகவுடன் தொடர்பில்தான் இருக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தை கையாண்ட விதத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தேவகவுடா பாராட்டி இருக்கிறார். எதிர்கட்சிகள் ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியபோது, தேவகவுடா மட்டும் அஸ்வின் வைஷ்ணவை பாராட்டினார்.
இதுமட்டுமின்றி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தபோது தேவகவுடா இந்த விழாவில் கலந்து கொண்டார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது எதிர்கொண்டு இருக்கும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் ஜேடியு கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்ற இடங்களில் எதிர்கொண்டு இருக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கர்நாடகா மாநில தேர்தலில் எந்த வகையிலும் பாஜகவின் வாக்கு வங்கி குறையவில்லை. ஜேடியுவின் வாக்குகள்தான் காங்கிரஸ் கட்சிக்கு மாறியுள்ளது.
எதிர்கொண்டு இருக்கும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சட்டீஸ்கர் மாநில தேர்தல்களும் பாஜகவுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு சவாலாகவே இருக்கப் போகின்றன. பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் தற்போது களம் மாறி வருகிறது. ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கு எதிராக களம் மாறி வருகிறது. இப்படி அரசியல் சதுரங்கம் நடந்து கொண்டு இருந்தாலும் முடிவு மக்கள் கையில்.