கேரளாவில் “ ஓ “ போட்ட தமிழ் பெண் கலெக்டர் !! கலக்கும் வாசுகி ஐஏஎஸ் !!

By Selvanayagam PFirst Published Aug 21, 2018, 2:13 AM IST
Highlights

கேரளாவில் கடந்த 2 வாரங்களாக மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை கௌரவிக்கும் விதமாக அவர்கள் நடுவில் பேசிய திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் வாசுகி ஐஏஎஸ், அவர்களின் சேவைகளை வெகுவாக பாராட்டி, அவர்களை உற்சாகப்படுத்த  “ ஓ “ போடு என கூறி மகிழ்வித்தார்.

கேரளாவில், தென்மேற்கு பருவமழை கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீட்புப்படையினர் அல்லாது கேரளா முழுவதும் பல்லாயிரக்கணக்கான  வாலண்டியர்கள் தாமாக முன்வந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உணவுப் பொருட்களை வழங்குவது, விமானத்தில் வரும் நிவாரணப் பொருட்கள் ஏற்றி, இறக்குவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா  முழுவதற்கும் நிவாரணப் பொருட்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.  அங்கு பொருட்களை ஏற்றி இறக்கும் பணியை இந்த வாலண்டியர்கள் செய்து வருகின்றனர்

இதனிடையே திருவனந்தபுரம் காட்டன் பார்க் பில்டிங்கில் தங்கியுள்ள அந்த இளைஞர்களிடம்  மாவட்ட ஆட்சியர் வாசுகி பேசினார். அப்போது நீங்கள் அனைவரும் ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள் என பாராட்டினார்.

நீங்கள் செய்த பணிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பேசப்பட்டு வருகிறது என்றும் மலையாளிகள் யார் என்பதை இந்த உலகிற்கு காட்டியுள்ளீர்கள் என்றும் தெரிவித்தார். உங்களது பணி மிகப் பெரிய சாதனை என்றும், பல ஆயிரக்கணக்கான டன் உணவுப் பொருட்களை நீங்கள் ஏற்றி இறக்கியுள்ளீர்கள்!  இதற்கான செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டும்..தற்போது அரசுக்கு நீங்கள் மிச்சப்படுத்தி இருக்கிறீர்கள் என பாராட்டினார்.

 

நான் கல்லூரியில் படிக்கும்போது யாராவது நல்ல காரியம் செய்தால் எல்லோரும் “ ஓ “ போடுவோம். தற்போது நீங்கள் எல்லோரும் நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் எனவே நான் “ ஓ “ போடு என்ற சொல்லுவேன், நீங்கள் ஓகோ என்று சொல்லுங்கள் என தெரிவித்து “ ஓ “ போட்டார். உடனே வாலண்டியர்களும் ஓகோ என்று சொல்லி உற்சாகமடைந்தனர்.

தாமாக முன்வந்து நிவாரணப்  பணிகளை மேற்கொள்ளும் அந்த இளைஞர்களை மாவட்ட ஆட்சியர் வாசுகி உற்சாகப்படுத்தி பராட்டிய விதம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

click me!