வெள்ளம் வடிந்த பின் கடவுளின் தேசம் எப்படி இருக்கிறது தெரியுமா ? சேறு, சகதி… பாம்பு, தேள்… அதிர்ந்து போன கேரள மக்கள் …

By Selvanayagam PFirst Published Aug 20, 2018, 9:52 PM IST
Highlights

கேரளாவில் கடந்த 10 நாட்களாக காட்டுத்தனமாக பெய்த மழையில் கிட்டத்தட்ட 14 மாவட்டங்கள் முற்றிலும் மூழ்கியது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில், வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால் அனைத்து வீடுகளுமே சேறாலும் சகதியாலும் மூழ்கிக் கிடக்கிறது. வீட்டுக்குள் சென்ற மக்களை பாம்புகளும், தேள்களும் வரவேற்கின்றன.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில், தென்மேற்கு பருவமழை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் முற்றிலும் அழுகி நாசமாகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன..21,000 கோடி ரூபாய்க்கு மேல்  பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவல்களை கேரள அரசு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில  நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் இன்று கேரளாவில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

கேரளாவின்  பல பகுதிகளிலும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. பல இட்ங்களில் ஆட்டோக்கள் ஓடின. ஆனால் பெட்ரோல் பங்க்குகள் முழுமையாக செயல்படவில்லை. நிலைமை சீரடைந்து வரும் பகுதிகளில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.  தொலைபேசி இணைப்புகள் தற்போது கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஏடிஎம் மையங்கள் இன்று ஒரு சில இடங்களில் செயல்பட்டன. இதன் முன்பு  பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் சென்றனர். மூடப்பட்ட  கொச்சி விமான நிலையம் இன்று செய்லபடத் தொடங்கியுள்ளது.  அங்குள்ள கடற்படை விமான தளத்தில்  இருந்து பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரமாக தண்ணீருக்குள் மூழ்யிருந்த வீடுகளில் இருந்து தண்ணீர் தற்போது வடியத் தொடங்கியுள்ளது.

தற்காலிக முகாம்களில் இருந்து பொது மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் வீடுகளுக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் 2 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் அனைத்து நாசமாகியுள்ளன.

டி.வி. ஃபிரிட்ஜ்  வாஷிங் மெஷின்  போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இனி பயன்படுத்த முடியாதபடி வீணாகிப் போயுள்ளன. வீட்டைச் சுற்றியிருந்த  மரங்கள் எல்லாம காணாமல் போயிருந்தன. ஒரு சில பகுதிகளில் பக்கத்து  வீடே காணாமல் போயிருந்தது.

பல வீடுகளில் பாம்புகளும், தேள்களும் பொது மக்களை வரவேற்றன.  இதையடுத்து அதிர்ந்து போன பொது மக்கள், அவற்றை வெளியேற்றினர்.

தங்கள் வீடுகளின் நிலை குறித்து கேரள மக்கள் அதிர்ச்சி அடைந்தாலும், கொஞ்சம் கூட மனம் தளராமல் வீட்டை சுத்தம் செய்து தங்களது பழைய வாழ்க்கை முறையை மீண்டும் அமைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.=

click me!