சிஎம் சார் எங்களுக்கு பணம் வேண்டாம்… எங்களோட சகோதரர்களை காப்பாற்றுவது எங்கள் கடமை… பினராயி விஜயனை உருகச் செய்த மீனவர்கள் !!

By Selvanayagam PFirst Published Aug 21, 2018, 12:01 AM IST
Highlights

கேரள மாநிலம் கடும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ஊதியம்  வழங்கப்படும் என முதலமைச்சர்  பினராயி விஜயன் அறிவித்திருந்த நிலையில், எங்களுக்கு பணத்தை கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள் என்றும், எங்களுடைய சகோதர, சகோதரியைக் காப்பாற்றுவது எனது கடமையாகும் என்றும் கூறிய  மீனவர்கள் ஊதியம் வேண்டாம் என மறுத்துள்ளனர்.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில், தென்மேற்கு பருவமழை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர்களுடன் சேர்ந்து பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எந்தவிதமான சுயநலமும் பாராமல் தங்களிடம் இருக்கும் படகுகளைக் கொண்டு வந்து வெள்ள நீரில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு வருகின்றனர்.

மீனவர்களது சேவையைப் பாராட்டிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மீனவர்கள் ஒவ்வொருவரின் பணியும் மகக்தானது. ராணுவத்துக்கு இணையாகப் பணியை மேற்கொள்கிறார்கள். நம் மாநிலத்தின் ராணுவத்தினர்களாக மீனவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நாள்தோறும் 3 ஆயிரம்  ரூபாய் ஊதியம் தரப்படும் என்றும், படகுகளுக்கு எந்தவிதமான சேதம் ஏற்பட்டாலும் அதை அரசே சரிசெய்து தரும் என்றும் தெரிவித்தார்.

மீனவர்களுன்க்கு . தேவையான எரிபொருட்களை அரசே வழங்கும். படகுகளை மீண்டும் அவர்கள் இடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு அரசுடையது. மீட்புப்பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து அவர்களை வரவேற்க வேண்டும் என்று  பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்த மீனவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அதே நேரத்தில்  பல்வேறு இடங்களில் தேங்கி இருக்கும் நீரில் மக்களை மீட்பது சவாலானதுதான் அதைச நாங்கள்  செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் செய்யும் மீட்புப்பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம் என மீனவர்கள் தெரிவித்தனர். .

ஆனால், எங்கள் சேவைக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக சிஎம் கூறியதுதான் வேதனையளிக்கிறது என்றும்  எங்களின் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவதும், சக மனிதர்களை காப்பதும் எங்களின் கடமை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்..

மக்களின் உயிரைக் காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று மீனவர்கள் மறுத்துள்ளனர். மீனவர்களின் இந்த மனிதாபிமான செயல் முதலமைச்சர் பினராயி விஜயனை உருகச் செய்துள்ளது

click me!