
பஞ்சாப் மாநிலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூறும், ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தில் உள்ள கிணற்றில் மக்கள் போட்டு சென்ற பணத்தை சிலர் கொள்ளையடித்துள்ளனர்.
வரலாற்று சம்பவம்
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த, 1919ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி இங்குள்ள மைதானத்தில் குழுமி இருந்த மக்கள் மீது, ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் தலைமையில் வந்த வீரர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் ஏராளமானோர் வீர மரணம் அடைந்தனர்.துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க பலர் அங்குள்ள கிணற்றில் குதித்தனர். அப்போது காயம் அடைந்து பலர் உயிரிழந்தனர்.
கம்பிகளை உடைத்து…
தற்போது ஜாலியன்வாலாபாக் பகுதி, பாதுகாக்கப்பட்ட ஒன்றாக, மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிணற்றின் மீது கிரில் போட்டு மூடியுள்ளனர்.
அதையும் தாண்டி, மக்கள் மரியாதை நிமித்தமாக கிணற்றின் உள்ளே ஏராளமான நாணயங்கள் மற்றும் பணத்தை போட்டு விட்டு செல்வார்கள்.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை,அந்த கிணற்றின் மீது இருந்த கிரில் கம்பிகளை உடைத்து விட்டு சிலர் கிணற்றில் இருந்த பணம் மற்றும் நாணயங்களை எடுத்து சென்று விட்டனர்.
15 அடி ஆழம்
கிணற்றுக்குள் கயிறை விட்டு 15 அடி ஆழத்திற்கு கொள்ளையர்கள் இறங்கியுள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்த சுமார் ரூ. 3 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை.