
மத்திய அரசின் நலத்திட்டத்தின் கீழ் காசநோய்க்கு (டியூபர் குளோசிஸ்) சிகிச்சை பெறும் நோயாளிகள் கண்டிப்பாக ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவ்வாறு ஆதார் எண்ணை மருத்துவமனையில் பதிவு செய்யாத நோயாளிகள், வரும் ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதிக்குள் தங்கள் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ரேஷன் கார்டு, வங்கிக்கணக்கு, கியாஸ் சிலிண்டர் மானியம், பான்கார்டில் ஆதார் எண்ணை இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்கும் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “ மத்திய அரசின் சுகாதாரத்திட்டத்தின் கீழ்,(ஆர்.என்.டி.சி.பி.) காசநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள், இனி சிகிச்சை பெற உள்ள நபர்கள், கண்டிப்பாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், அல்லது ஆதார் எண் பதிவு செய்ய வசதி இல்லாதவர்களுக்கு விரைவில் பதிவு செய்வதற்கான வசதிகளை அரசு வழங்கும்.
இந்த திட்டத்தின் கீழ் நோயாளிகள் கூடுதல் நிதியுதவி பெறமுடியும். அப்போது ஆதார் எண் இல்லாத நோயாளிகள், ஆதார் பதிவு செய்ததற்கான ஆவணம், பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன்கார்டு, உள்ளிட்டவற்றை காண்பித்து உதவி பெறலாம். இந்த உத்தரவு,பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும். அதே சமயம், அசாம், ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு இது பொருந்தாது. ஆதார் எண்ணை மருத்துவமனையில் பதிவு செய்யாத நோயாளிகள், வரும் ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதிக்குள் தங்கள் எண்ணை பதிவு செய்ய வேண்டும் ’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.