
மதிய உணவுத்திட்டத்தில் கம்பஞ்சோறு வழங்கவும், ரேஷன் கடைகளில் கம்பு தானியம் வினியோகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இரும்பு, நார்ச்சத்து
ராகி, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் ஒன்றாக கம்பு விளங்குகிறது. இதில் மற்ற தானியங்களை விட இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வறட்சிக் காலங்களிலும் இதன் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே அதன் பயன்பாட்டை நாடு முழுவதிலும் ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பரிந்துரை
இது தொடர்பாக ஆலோசனை நடத்திய நிதி ஆயோக், மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு அளிக்கவும், பொதுமக்களுக்கு ரேஷன் மூலமாக கம்பு தானியம் வினியோகிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது-
விழிப்புணர்வு
‘‘அதிக சத்துள்ள கம்பு தானியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் எங்கள் அமைச்சகம் இறங்கியுள்ளது. மதிய உணவுக்கும் ரேஷன் கடைகளுக்கும் இதை விநியோகிக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
தற்போது கம்பு சேமிக்கும் வசதி குறைவாக இருப்பதால் அதை அதிகரித்த பிறகு இதன் விநியோக அறிவிப்பு வெளியாகும்.” என்று தெரிவித்தனர்.
குறைந்த நீரில்...
இதற்கிடையே குறைந்த நீரில் அதிக தானிய விளைச்சல் பெறுவது குறித்து இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலும் ஆய்வு செய்து வருகிறது. இதன் மீதான ஆய்வறிக்கையை கவுன்சில் விரைவில் வெளியிட உள்ளது.
இதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் ‘விவசாயிகள் உற்பத்தி அமைப்பு’ என ஒன்றை ஏற்படுத்தி, கம்பு உள்ளிட்ட அனைத்து தானியங்களும் பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.
சமூக அந்தஸ்து
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் கம்பு பயன்பாடு குறைந்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 72 % நகரங்கள், 73% கிராமங்களில் இதன் பயன்பாடு குறைந்துள்ளது. அரிசி பயன்பாடு 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இதற்கு கம்பு உணவை சமூக அந்தஸ்துக்கு குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் அதை மதிய உணவு திட்டத்தில் விநியோகிக்க சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பலாம் என்ற தயக்கமும் மத்திய அரசிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.