
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரின் பெயர் கோயிலில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், இந்துக்கள்அல்லாத புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலில் வழிபாடு
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 4,9 தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதனால், தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்றுபுகழ்பெற்ற ஸ்ரீ சோம்நாதர் கோயிலுக்கு சென்று அங்கு வழிபாடு நடத்தினார்.
இந்து அல்லாதவர்
அங்கு வழிபாடு நடத்திவிட்டு வரும்போது, கோயிலில் உள்ள வி.ஐ.பி.க்கள் வருகை பதிவேட்டில், இந்துக்கள்அல்லாதவர்கள் புத்தகத்தில் ராகுல் காந்தியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாரோ எழுதினர்
இது குறித்து சோம்நாத் கோயிலின் அறக்கட்டளை செயலாளர் பிரவிண் லாகிரி கூறுகையில், “ இந்த கோயிலுக்கள் வரும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த புத்தகத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். சிலர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அகமது படேல் பெயரை சேர்த்துள்ளனர். இதற்கும் கோயிலுக்கும் தொடர்பு இல்லை.
இந்த கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை. இந்துக்கள் அல்லாதவர்கள் கோயில்நிர்வாகிகளிடம்் சிறப்பு அனுமதி பெற்றபின்பே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மறுப்பு
இதற்கிடையே ராகுல் காந்தி இந்துக்கள் அல்லாத வருகை பதிவேட்டில் கையொப்பம் இடவில்லை, அது போலியானது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தீபேந்திரசிங் ஹூடா கூறுகையில், “ ராகுல் காந்தி தீவிரமான சிவபக்தர். அவர் உண்மையை நம்புகிறவர். நாட்டில் உண்மையாக நிலவும் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவே பா.ஜனதா திட்டமிட்டு இப்படி பரப்புகிறது.
உண்மையில் ராகுல் காந்தியின் கையொப்பம் அப்படி இருக்காது. யாரோ சிலர்தான் ராகுல் காந்தி ஜி என்று எழுதி இருக்கிறார்கள். ராகுல் எதற்கு தனது பெயரை ராகுல் காந்தி ஜி என்று எழுத வேண்டும். யார் எழுதியது எனத் தெரியாது. நாட்டின் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப தன்னால் என்ன செய்யமுடியுமோ அதை பாஜனதா சிறப்பாகச் செய்கிறது’’ எனத் தெரிவித்தார்.