
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ மித்ரா ரோபோ’ வை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
சமூக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மித்ரா ரோபோ , பல்வேறு மொழிகள் பேசும் திறன் உடையதாகவும், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப திறனும் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மாநாடு
ஐதராபாத்தில் நடந்து வரும் உலக தொழில்முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்ப் தலைமையிலான குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் தொடக்க விழாவான நேற்றுமுன்தினம், பிரதமர் மோடியைச் சந்தித்து இவாங்கா டிரம்ப் உரையாடினார். அதன்பின், இருவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மித்ரா ரோபோவை’ அறிமுகம் செய்து வைத்தனர்.
மித்ரா ரோபோ
மித்ரா ரோபோவை பெங்களூரைச் சேர்ந்த ‘இவென்ட்டோ ரோபோட்டிக்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக பாலாஜிவிஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார். இந்த ரோபோவை இந்த நிறுவனத்தினர் வங்கிகள், ஓட்டல்கள், கார்பரேட் நிறுவனங்களில் வைத்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்தியா தயாரிப்பு
இந்த மித்ரா ரோபோ குறித்து நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு கண்காணிப்பாளர் கவுன்டின்யா பன்யம் கூறுகையில், “ மித்ரா ரோபோ முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. பேஸ்புக், கூகுளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், தகவல்கள் இதிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தொழில்நுட்பம்
இந்த ரோபோக்களை விற்பனை செய்தும் வருகிறோம். முதல்கட்டமாக இந்தரோபோவை கனரா வங்கிக்கு வாடகைக்கு கொடுத்துள்ளோம். இந்த ரோபோவில்முகத்தை உணரும் தொழில்நுட்பம் இருப்பதால், வாடிக்கையாளர்களை அடையாளம் கொள்ளும், பல்வேறு மொழிகளிலும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.
ஏ.டி.எம். போன்று சேவை
ஒரு ஏ.டி.எம். எந்திரம் செய்யும் பணியை இந்த மித்ரா ரோபோ செய்யும். வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். உங்களின் வங்கிக்கணக்கு, வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைப்பது உள்ளிட்ட அனைத்தையும் இந்த ரோபோ செய்யும். நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமாக வாடகை கட்டணம் வசூலிக்கிறோம். ஒரு முறை சார்ஜ்செய்தால், 8 முதல் 10 மணிநேரம் வரை பணியாற்றும் திறன் உடையது’’எனத் தெரிவித்தார்.
மித்ராவுக்கு முன் பிரான்ஸின் அல்டெப்ரான் ரோபாடிக்ஸ் நிறுவனம் ஒருரோபோவை தயாரித்து சாப்ட்பேங் என்ற வங்கிக்கு கடந்த 2014ம் ஆண்டு கொடுத்துள்ளது. பெப்பர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, 140 சாப்ட்வங்கிகளில் செயல்பட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.