பெங்களூரில் நடைபெறும் 14வது விமான கண்காட்சியை பிரதமர் நரேரந்திர மோடி இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலகங்காவில் ஏரோ இந்தியா 2023 எனப்படும் 14வது விமானக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர், “இன்று பெங்களூரு வானில் புதிய இந்தியாவைக் காண்கிறோம். இது இந்தியா அடைந்துள்ள புதிய உயரங்களைக் காட்டுவதாக இருக்கிறது. இப்போது நம் நாடு புதிய உயரங்களை எட்டுவது மட்டுமன்றி அவற்றைக் கடக்கவும் செய்துவிட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏரோ இந்தியா கண்காட்சி புதிய இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காட்சிப்படுத்துகிறது. உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் மாநிலத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இதனால் விமானப்படை மற்றும் பாதுகாப்புத்துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.” எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மோடியின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றியதே பால் தாக்ரேதான்! உத்தவ் தாக்கரே பாய்ச்சல்
21ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிடாது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, “கடந்த காலங்களில் இந்தியா ராணுவத் தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. இப்போது 75 நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன” என்றார்.
“பாதுகாப்புத்துறை தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நம்பகமான கூட்டாளிகளை விரும்பும் நாடுகளுக்கு ஏற்ற நட்பு நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அமிர்த காலத்தில் இந்தியாவின் முன்னேற்றம் போர்விமானங்களின் பாய்ச்சல் போல உள்ளது.” எனவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சியை முன்னிட்டு உருவாக்கப்பட சிறப்பு அஞ்சல்தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார். முதல் நாளான இன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளைப் பிரதமர் கண்டுகளித்தார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமானக் கண்காட்சியாகக் கருதப்படும் இந்தக் கண்காட்சியில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அதிநவீன விமானங்கள் சாகசங்கள் நிகழ்த்துகின்றன. பொதுமக்களும் இந்தக் கண்காட்சியை நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Free Scooter: தமிழகத்தை பின்பற்றுகிறதா பாஜக? திரிபுராவில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்!