புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான சட்டம்: மத்திய அரசுக்கு திருமா கடிதம்!

Published : Dec 10, 2023, 11:35 AM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான சட்டம்: மத்திய அரசுக்கு திருமா கடிதம்!

சுருக்கம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்

புலம் பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும்; மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டத்தைத் திறம்பட செயல்படுத்தவும் வலியுறுத்தி ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவிற்கு விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “ நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினையை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அவர்களின் அவலநிலையை சீர் செய்ய உங்கள் உடனடியான தலையீட்டை நான் வேண்டுகிறேன்.

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்குத் தொழிலாளர்கள் ஏராளமாகத் தொடர்ந்து புலம்பெயர்வதை இந்தியா கண்டுவருகிறது. துரதிர்ஷ்டவசமாக, தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி பலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 10 கோடி  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனரென்றும்,  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்கள் நேரடியாக 10% பங்களிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவுக்கு அவர்கள் தாக்கம் ஏற்படுத்தினாலும், அவர்களின் அடையாளங்கள், பணியிடங்கள், ஆட்சேர்ப்பு செயல்முறைகள் மற்றும் பாதிப்புகள் உட்பட,  புலம்பெயர்வோர் பற்றிய முக்கியமான தரவுகள் அரசாங்கத்திடம் இல்லை. முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது நலனுக்காக அரசாங்கம் செய்துள்ள பாதுகாப்பையும் தாண்டி ஒப்பந்ததாரர்களின் விருப்பப்படி அவர்கள் வேலை செய்த வேண்டியுள்ளது. 

பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை: மத்திய அரசு பதில்!

அவர்களைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட ‘மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம்- 1979’ புலம்பெயர்ந்து செல்லும் இலக்கு மாநிலங்களில் முதலாளிகள் பதிவு செய்ய வேண்டுமென்றும், தொழிலாளர்களின் சொந்த மாநில அதிகாரிகளிடமிருந்து உரிமங்களைப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது. இருப்பினும், அது உரிய விதத்தில் செயல்படுத்தப்படாததால்  பலரையும் பாதிப்படையச் செய்துள்ளது. 

தொழிலாளர் சட்டங்கள் யாவும் இப்போது நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்டு , இன்னும் அவை செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே, புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும்; மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டத்தைத் திறம்பட செயல்படுத்தவும்; தகவல் தொடர்புக்கான முறையான தளத்தை ஏற்படுத்தவும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
Rahul Gandhi with Messi: மெஸ்ஸியுடன் கூலாக உரையாடிய ராகுல் காந்தி.. ரசிகர்கள் ஆரவாரம்..