பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் அவருக்கு நீதி கிடைத்த 2 வாரங்களில் அவரது தந்தை காலமானார்
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் என்ற இடத்தில் சவுமியா விஸ்வநாதன் என்ற பெண் பத்திரிகையாளர் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
சம்பவ தினத்தன்று பணி முடிந்து அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சவுமியா விஸ்வநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தீர்ப்பளித்தார். ஐந்தாவது நபரான அஜய் சேத்தி, திருடப்பட்ட காரை வைத்திருந்ததற்காக குற்றவாளி எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
undefined
இதையடுத்து, ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், அவர்களுக்கு உதவிய அஜய் சேத்தி என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சவுமியாவின் பெற்றோர் டெல்லியில் தங்கி தொடர்ந்து தங்கள் மகளுக்கு நீதி கோரி சட்டப்போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், 82 வயதான சவுமியாவின் தந்தை விஸ்வநாதன் நேற்று காலமானார். சவுமியா உயிரோடிருந்தால் நேற்று முன் தினம் அவருக்கு 41 வயதாகியிருக்கும். அவரது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு ஒரு நாள் கழித்து அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.